பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு ஆண்டுகளின் அருந்தவம் ⚫ 139

கிறேன்; கரும விதியின் உண்மையையும் நான் காண்கிறேன்; ஆனால் உங்கள் கொள்கைப்படி சகல செயல்களுக்கும் காரணமாக விளங்கும் ஆன்மாவை மட்டும் நான் காண முடியவில்லை. “நான்” என்று அகம் இல்லாமலே மறு பிறப்பு ஏற்படுகிறது. “நான் கூறுகிறேன்,” “நான் செய்வேன்” என்ற சொற்றொடர்களிலுள்ள இந்த ஆன்மா, இந்த அகம், இந்த அகங்காரம் ஒரு மாயை. அந்த அகம் உண்மையாக உளதென்றால், அகங்காரத்திலிருந்து விடுதலையடைதல் எப்படி இயலும்! நரக வேதனையின் பயமே எல்லையற்றிருக்கும்; விடுதலை என்பதும் இல்லாமற்போகும். உயிர் வாழ்வில் ஏற்படும். தீமைகள் நம் அறியாமையிலிருந்தும், பாவத்திலிருந்துப் ஏற்படுகின்றன என்ற நிலை மாறி நம் வாழ்வின் இயல்பே–இயற்கையே–அவைகள் என்று ஏற்பட்டு விடும்.’[1]

கௌதமர் உருத்திரக ராமபுத்திரரிடம் எட்டாவது சமாபத்தியை மட்டும் உபதேசம் பெற்றார். அந்த உபதேசப்படி நடந்த பிறகு, ஆசிரியர் சீடரும் தம் நிலைக்கு வந்து விட்டதை எண்ணிப் பெருமகிழ்ச்சியடைந்து, கௌதமரையும் தம்மோடு இருந்து விடும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் கௌதமர் சீடராகிய தம்மைக் குரு நிலையில் அமரச் செய்ததற்காக வந்தனம் கூறி, அவருடைய சித்தாந்தத்திலும் திருப்தியடையாமல், மேலும் சத்திய சோதனை செய்வதற்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஆலயங்களிலுள்ள குருக்கள் முதலியோர்களிடம் போய்த் தம் சந்தேகங்களை நீக்கும்படி வேண்டினார். ஆனால் எங்கும் அவர் தெளிவு காண முடியவில்லை. உயிர்ப் பலிகளால் தேவர்களைத் திருப்தி செய்யும்


  1. ‘மிலிந்தன் பிரச்னைகள் (மிலிந்த பன் ஹா)’