பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 ⚫ போதி மாதவன்

வழியிலே மக்கள் சென்று கொண்டிருந்ததைக் கண்டு அவர் வருந்தினார். இதனால் ஒழுக்கம் அறவே கைவிடப் படுவதை எண்ணி அவர் மனம் புழுங்கினார். ‘மந்திர தத்திரங்கள் பயனற்றவை; பிரார்த்தனைகள் வெறும் சொற்குவியல்கள்; தொழுது வரம் கேட்டுக் கிடைப்பதும் ஒன்றுமில்லை. காமத்தையும் பேராசையையும் கைவிட்டுத் தீய உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெற்று, வெறுப்பையும் துவேஷத்தையும் நீக்கி வாழ்வதே சரியான வேள்வி; சரியான வணக்கம்’ என்று அவர் சிந்தனை செய்தார்.

உண்மையான ஞானத்தை அடைவதற்காகக் கௌதமர் ஒரே வைராக்கியத்துடன் அலைந்து கொண் டிருந்தார். ஆசிரியர்களிடம் உபதேசம் கேட்டாகி விட்டது. ஆயினும் மனத்தில் அமைதியில்லை. எனவே அவர் தாமாகப் பெரு முயற்சி செய்து, தவத்தில் எத்தனை வகையுண்டோ அத்தனையையும் கைக்கொண்டு, இயன்ற வரை சமாதியில் அமர்ந்து, மெய்யறிவைப் பெறவேண்டும் என்று தீர்மானித்தார். தாமே தமக்கு வழிகாட்டி என்ற முடிவுக்கு வந்தார்.

உருவேலா வனம்

அந்நிலையில் மகத நாட்டில் நைரஞ்சரை[1] நதியின் கரையிலேயுள்ள உருவேலா[2] வனத்தை அடைந்தார். கௌதமருடைய சரித்திரத்தில் இந்த ஆரணியம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. இதிலேதான் ஆறு வருடம் அவர் அருந்தவம் செய்ய நேர்ந்தது.


  1. இக்காலத்தில் பல்குனி ஆறு என்று அழைக்கப் பெறுகின்றது; இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் புனிதத் தலமாகிய கயை நகரம் இதன் கரையிலுள்ளது.
  2. இதை ஞான ஆரணியம் என்பர்.