பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு ஆண்டுகளின் அருந்தவம் ⚫ 143

பிச்சை ஏற்பார்; அதுவும் ஒரு பிடி சோறு தான். சில சமயங்களில் இரண்டு முதல் ஏழு வீடுகள் வரை பிச்சை ஏற்பினும், வீட்டுக்கு ஒரு பிடியே பெற்றுக் கொள்ளுவார். சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஒரு வேளையும், இரண்டு நாட்களுக்கு ஒரு வேளையும், ஏழு நாட்களுக்கு ஒரு வேளையுமே அவர் உண்பது வழக்கம். மாதத்திற்கு இரண்டே வேளைகள் மட்டும் உணவருந்துவதம் உண்டு. இவ்வாறு குறித்த காலங்களுக்கு இடையில் உணவில்லாமலிருக்கப் பழகினார். காய்கள், காட்டுத் தானியங்கள், உ.மி, குறுணை, எள், புல் முதலியவற்றோடு, பசுவன சாணத்தைக் கூட உணவாக உண்டு வந்தார். பல நாள் பட்டினியிருந்த பின்பு, ஓர் இலந்தைப் பழம், எள், அரிசி முதலியவற்றை மட்டும் புசித்து வந்திருக்கிறார்.

ஆயன் காட்டிய அன்பு

ஒரு நாள் அவர் மிகுந்த களைப்பினால் மூர்ச்சித்துக் காட்டு வழியிலே, மாண்டவர் போல, விழுந்து கிடந்தார். வெய்யிலிலே வாடிக் கொண்டிருந்த அவ்வுடலைக் கண்டு அந்த வழியிலே வந்து கொண்டிருந்த ஆயன் ஒருவன் மரக்கிளைகளை ஒடித்து அவரைச் சுற்றிலும் நட்டு நிழலுண்டாக்கி, ஒரு வெள்ளாட்டின் மடிக் காம்பைக் கறந்து அவர் வாயிலே சில துளிகள் பால் விழும்படி செய்தான். அந்தப் பால் தொண்டையுள் இறங்கியதும், கௌதமர் கண் விழித்து, ஒரு கலத்தில் கொஞ்சம் பால் கறந்து கொடுக்கும்படி ஆயனை வேண்டினார். அருளோடு உதவிபுரிய வந்த அந்த ஆயன் மறுத்தான். அவன் தான் தீண்டத்தகாத இடையன் என்பதால், அவன் தீண்டிய பாலை அண்ணல் பருக முடியாது என்பதாலேயே அவன் தயங்கினான்.

காட்டிலும் மேட்டிலும் கூடச் சாதிவேற்றுமை உணர்ச்சி தாண்டவமாடுவதை எண்ணிக் கௌதமர் வருந்திப் பின் வருவாறு கூறினார்: