பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 ⚫ போதி மாதவன்

உலர்ந்தும், பனியால் வாடியும் அவர் உடலைச் சித்திரவதை செய்துகொண்டிருந்தார்.

சில சமயங்களிலே கௌதமர் மயானங்களிலே பிணங்களின் எலும்புகளின் மீது படுத்துக் கொள்வார். அவ்வாறு இருக்கும் சமயங்களிலே அவ்வழியாகச் செல்லும் ஆயர்கள் அவர்மீது உமிழ்ந்தும், களிமண்ணை வீசியும், அசுத்தப் படுத்தியதோடு, அவர் செவித்துளைகளில் வைக்கோற் குச்சிகளை நுழைத்து அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதும் வழக்கம். அப்படியிருந்தும், ‘சாரீபுத்திரா, அவர்களுக்கு எதிராக ஒரு தீய சிந்தனையேனும் எனக்குத் தோன்றியதான நினைவே இல்லை. அவ்வளவு தூரம் நான் பொறுமையைக் கைக்கொண்டிருந்தேன், சாரீ புத்திரா!’ என்று அவரே பின்னால் குறிப்பிட்டிருக்கிறார்.


பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து
இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று,
நன் மங்கையரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும்
தாழ்மை சொல்லிச்
சேய்போல் இருப்பவர்கண்டீர்: உண்மை
ஞானம் தெளிந்தவரே!’

என்று பட்டினத்தடிகள் பாடிய வண்ணம் கௌதம அடிகளும் நடந்து வந்தார்.

மேலே கூறிய பரீட்சைகளுக்குப் பின்னால், இன்னும் பயங்கரமான திட்டங்களையும் நிறைவேற்றிப் பார்க்க வேண்டும் என்று அவர் முனைந்தார். மூச்சை அடக்கவும், உணவையே தீண்டாமல் விரதமிருக்கவும் அவர் செய்த முயற்சிகளையும், அவற்றின் முடிவுகளையும் பற்றிப் பிற்-