பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 ⚫ போதி மாதவன்

வேதனைகள் எவ்வளவோ அதிகமாகவே இருக்க வேண்டும். எதிர்காலத்தில் மற்றவர்கள் தாங்கக்கூடிய வேதனை உணர்ச்சிகளைக் காட்டினும் என் வேதனை உணர்ச்சிகள் மிக அதிகமாகவே இருக்கவேண்டும். இப்போது பிறர் தாங்கும் உணர்ச்சிகளைக் காட்டிலும் என்னுடையவை மிக அதிகமாகவே இருக்கும். ஆயினும், இத்தகைய கொடூரமான, துக்ககரமான வழியிலும், அழியும் வாழ்வுக்கு மேற்பட்ட உண்மையான ஆரிய மெய்ஞ்ஞானத்தையும் உள்ளொளியையும் நான் பெற முடியவில்லை. மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு இதைத் தவிர வேறு வழி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.[1]

கௌதமருக்குத் தம்முடைய சிறு வயதிலே நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. கபிலவாஸ்துவில் அவர் தந்தையாகிய சாக்கிய மன்னர் மற்றைப் பரிவாரங்களோடு பொன் ஏர் கட்டி உழுது கொண்டிருக்கையில், அவர் நாவல் மரத்தடியில் தனியே தியானத்தில் அமர்ந்திருந்ததை இப்போது எண்ணிப் பார்த்தார். அந்தச் சமயத்தில் அவர் அறிவு தெளிவாயிருந்தது; உடலும் களைப்பின்றி ஊக்கமாயிருந்தது. அதை எண்ணிப் பார்க்கையில், உண்ணா நோன்பினால் உடல் தளர்ந்து போவதால், அற்ப ஆகாரமேனும் உட்கொள்ளவேண்டியது அவசியம் என்று அவருக்குத் தோன்றிற்று. சதைகளெல்லாம் கரைந்து, உதிரம் சுண்டி, உடல் வெறும் எலும்புக் கூடாக இருந்த நிலையில், அவர் பட்டினித் தவத்தைக் கைவிட வேண்டும் என்றும், அரிசிக் கஞ்சியேனும் அருந்த வேண்டும் என்று தீர்மானித்தார்.

ஆசைகளை அடக்கிப் பூரண ஞானம் பெறுவதற்கு இது வழியன்று; ஜம்பு மரத்தடியில் சிறு வயதில் நான் கண்ட முறையே சரியான முறை. உடல் வலியை இழந்-


  1. ‘மஜ்ஜிம நிகாயம் - மகா சச்சக சூத்திரம்’