பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 ⚫ போதி மாதவன்

பிடித்துக் கொண்டு ஒருவாறு கரையேறினார். பின்பு பக்கத்திலிருந்த ஓர் அரசமரத்தடிக்குச் சென்று அங்கே சிறிது நேரம் வீற்றிருந்தார்.

சுஜாதை அளித்த உணவு

அந்த நேரத்தில் அழகும் குணமும் ஒருங்கே அமைந்த ‘நந்தபாலா’ என்ற சுஜாதை ஆனந்தத்தோடும் ஆச்சரியத்தோடும் அவ்விடத்திற்கு வந்து அமலரைக் கண்டாள். ஒரு கையால் தன் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு, மற்றொரு கையில் ஒரு பொற் கிண்ணத்தில் பாலில் வெந்த பொங்கலை ஏந்திக் கொண்டிருந்தாள். மரத்தின் அடியில் பணிப்பெண் ஒருத்தி களம் மெழுகிக் கோலமிட்டு வைத்திருந்தாள்.

சுஜாதை என்ற சுகுண சுந்தரி அருகேயிருந்த சேனானி கிராமத்துத் தலைவனின் மனைவி. செல்வமும் சிறப்பும் பெற்று அவ்விருவரும் இல்வாழ்க்கை நடத்தி வருகையில் எளிமையும், பொறுமையும், இரக்கமுமுடைய அம்மாதரசி தனக்குக் குழந்தையில்லையே என்று கவலையடைந்து, பல தெய்வங்களுக்கும் நேர்ந்து கொண்டாள். ஆண் குழந்தை பிறந்தால் தங்கக் கிண்ணத்தில் பாலமுது படைத்து வணங்குவதாக அருகேயிருந்த காட்டின் தெய்வத்தையும் வேண்டிக் கொண்டாள். அவளுக்குப் பொற் சிலை போன்ற புத்திரன் பிறந்து மூன்று மாதமாயிற்று. உடனே முன் நேர்ந்து கொண்டபடியே அவள் இனிய அமுது தயாரித்துக் கொண்டு, காட்டுத் தெய்வத்திற்கு அதைப் படைப்பதற்காகக் குழந்தையுடன் புறப்பட்டு வந்தாள். அவளுடைய பணிப்பெண் முன்னாலேயே வந்து இடத்தைச் சுத்தம் செய்கையில், மரத்தினடியில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்த மாதவரைக் கண்டு, அவர் முகத்தில் தோன்றிய சோதியில் மயங்க, அங்கிருந்து ஓடிச் சென்று, சுஜாதையை எதிர்கொண்டு அழைத்து,