பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு ஆண்டுகளின் அருந்தவம் ⚫ 153

வனத்தில் வாழும் தெய்வமே அருள் வடிவமாக மரத்தடியில் அமர்ந்திருக்கிறது!’ என்று அதிசயத்தோடு கூவினாள். அதைக் கேட்டுத்தான் சுஜாதை ஆவலோடு ஓடிவந்தாள்.

வந்தவள் வள்ளலைக் கண்டாள்; கண்கள் குளிர்ந்து; உள்ளமும் குளிர்ந்தாள். ‘பகவன்! இந்த இன்னமுதை அருந்தி அருள் செய்யவேண்டும்!’ என்று கூறி, பொற் கிண்ணத்தை அவர் அடியில் வைத்து, உள்ளம் குழைந்து வணங்கி நின்றாள். அன்பும் அறிவும் நிறைந்த அந்த அழகுச் செல்வி அங்கேயிருந்து பார்த்து அகம் மகிழும் வண்ணம், அகளங்க மூர்த்தியும் அவள் படைத்த அமுதை அருந்தி இன்புற்றார்.[1] வாடி இளைத்து அவர் வருந்திய களைப்பெல்லாம் மாறிவிட்டது: ஊக்கமும் ஒளியும் தோன்றின. அழகு பொலியும் திருவதனத்தோடு, அவர் சுஜாதையை வாழ்த்தியருளினார். அவள் மார்போடு அணைத்திருந்த மதலையின் உச்சியில் கைவைத்து, ‘செல்வ! நீ நெடுநாள் இன்புற்று வாழ்வாயாக!’ என்று ஆசி கூறினார். அதன் பின் தாம் யார் என்பதையும் சுஜாதைக்கு விளக்கிக் கூறினார்.


  1. சுஜாதை அளித்த பொற்கிண்ணத்தை அப்படியே ஆற்றுக்கு எடுத்துச் சென்று, அங்கே, அமுது செய்து விட்டு அந்தக் கிண்ணத்தைக் கௌதமர் ஆற்றில் மிதக்க விட்ட தாயும், ‘இன்று நான் புத்தர் ஆக முடிந்தால்’ இந்தக் கிண்ணம் வெள்ளத்தை எதிர்த்துச் செல்லட்டும், என்று கூறிய தாயும், அவ்வாறே அந்தக் கிண்ணம் எண்பது பாக நீளம் வரை எதிர்த்துச் சென்று, ஒரு பெரிய சுழியில் தங்கி, நீருள் ஆழ்ந்து ‘நாக உலக மன்னன் காலா என்பவன் இருக்குமிடத்தை அடைந்தாயும் புத்த ஜாதகக் கதை ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.

போ -10