பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு ஆண்டுகளின் அருந்தவம் ⚫ 153

நம்பிக்கை எனக்குப் பிறந்து விட்டது! என் கருத்து நிறை வேற வேண்டும் என்று நீயும் என்னை வாழ்த்திவிட்டு செல்வாயாக!’ என்று அவர் கேட்டுக் கொண்டார். அவளும் அவர் சிந்தையின் எண்ணம் சித்தியடையும்படி வாழ்த்திவிட்டு, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றாள்.

கௌதமருடைய வாழ்க்கையில் அவர் எண்பது ஆண்டுகள் உண்ட உணவுகளில், இரண்டு உணவுகளையே அவர் மிகவும் பாராட்டிப் போற்றியிருக்கிறார். அவ்விரண்டில் ஒன்று அன்று சுஜாதை அளித்த அமுதமாகும். அதன் பெருமை சொல்லுந் தரமன்று. கௌதமர் ஞானமடையுமுன் அருந்திய கடைசி உணவு அதுவேயாகும்.

கடைசி முயற்சி

தெளிந்த அறிவும், திடமான மனமும் பெற்று அவர் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று, அன்று, பகற் பொழுதைச் சால மரங்கள் அடர்ந்திருந்த ஒரு சோலையிலே கழித்து விட்டு, மாலை நேரத்தில் ஆற்றோரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த மற்றொரு பெரிய அரச மரத்தின் அடியை அடைந்தார். அந்த மரமே ‘பணை ஐந் தோங்கிய பாசிலைப் போதி’[1] என்றும், ‘மகாபோதி’ என்றும் பின்னால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உலகப் புகழ் பெற்று வரும் அசுவத்த மரம். பசும்புல் படர்ந்திருந்த அதனடியிலே அமர்ந்து கொண்டு கௌதமர் தமது முடிவான பெருந்தவத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தார். அப்போது புல் அறுக்கும் சுவஸ்திகா (பாலியில் சோத்தியா) என்பவன் அவ்வழியாக வந்து, அவரைச் சந்தித்து, எட்டுக் கைப்பிடி அளவு புல்லை அவருக்கு


  1. சிலப்பதிகாரம்