பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்பதாம் இயல்

போதி மாதவன்

‘போதி மேவினை! புன்மை அகற்றினை!
சோதி வானவர் தொழஎழுந் தருளினை!
ஆதி நாத,நின் அடியிணை பரவுதும்!’

–வீரசோழியம்

மெய்யறிவு மனிதனுக்கு எட்டும்படி மிக அருகிலேயே உள்ளது. ஆயினும் அதை அடைய எவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்கிறது! அவனாகப்படைத்துக் கொண்ட ‘தான்’ என்னும் அகங்காரம், பெரும் பூதமாக வளர்ந்து, அவனையே ஆட்கொண்டு விடுகின்றது. அதனால் ஆசைகள் அவனைப் பற்றிக்கொள்கின்றன.

இன்பம் வேண்டி அவன் துடிக்கிறான்; அதனால் துன்பமே விளைகின்றது. மரணம் அவனுடைய தனித் தன்மையை அழித்துவிடுகின்றது. ஆயினும் அவனுக்கு அமைதியில்லை. உயிர் வாழும் ஆசை அவனைவிட்டு அகலுவதில்லை. மீண்டும் தனித் தன்மை பெற்று, அவன் புதுப் பிறவிகளை மேற்கொள்கிறான்.

உலகில் பாவமும் துக்கமும் பரவி நிற்கின்றன. மக்கள் உண்மையைப் பார்க்கிலும் மயக்கமே மேல் என்று கருதி வழி தவறிச் செல்கின்றனர். பாவமே பார்வைக்கு இனியதாய்த் தெரிகின்றது. ஏதோ ‘செயல், செயல்’ என்று அவர்கள் கருமங்களைச் செய்துகொண்டேயிருக்கின்றனர். அவர்களுடைய செயல்களும், அவர்கள் அடையும் இன்பங்களும் நீர்க்குமிழிகளாகவே இருக்-