பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 ⚫ போதி மாதவன்

கின்றன. குமிழிகள் உடைந்தவுடன் அவற்றினுள்ளே எதுவும் இல்லை !

கௌதம முனி ஆறு ஆண்டுகள் அருந்தவம் செய்த பிறகும் அவர் கொண்ட குறிக்கோளை அடைய முடிய வில்லை. உடலை வருத்துதல் வீண் வேலை என்று அவர் பிறருக்கெல்லாம் போதனை செய்தும், கடைசியில், ‘அதையும் செய்து பார்ப்போம்’ என்று தாமே தமது திருமேனியை வதைத்துக் கொண்டார்!

அதன் முடிவில் ஒரு வேளை அவருக்கே சந்தேகம் எழுந்திருக்கும். கண் முன்பு கண்ட நாடு, சுற்றம் எல்லாம் துறந்து, சாட்டில் கிடந்து வாடியும் இலட்சியம் கைகூடவில்லை. அது எட்டாத தாரகையாய், மேலும் மேலும் உயரே தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. ஒருவேளை எரிநட்சத்திரத்தையே உண்மைத் தாரகையாக எண்ணினாரா? கானலை நீர் என்று கருதி, அதன் பின்னே அலைந்து கொண்டிருக்கிறாரா? அவர் யாத்திரை முடிவற்ற நீண்ட யாத்திரையாகவே இருந்தது! அவர் மனத்தில் தோன்றிய ஐயப்பாடுகளை யாரே அளவிட்டுரைக்க முடியும்? அதில் நடந்த போராட்டங்களை யாரே புனைந்துரைக்க முடியும்?

ஞான உதயம்

ஆனால் அவர் கலங்கவில்லை. அவர் சித்தம் தெளிவாகவே யிருந்தது. மன உறுதிதான் அவருடைய மாசற்ற நண்பனாக விளங்கியது. அரச மரத்தின் அடியில் அமரும் போதே அவர் உறுதியுடன் சபதம் செய்து கொண்டு விட்டார்: ‘எனது இலட்சியம் கைகூடும் வரை நான் பூமியில் இந்த இடத்தைவிட்டு எழப்போவதில்லை!’ அந்தச் சூளூரை கேட்டு வன விலங்குகளும் பறவைகளும் வாயடங்கி அயர்ந்து விட்டன. காற்றில் ஆடிய மரங்-