பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போதி மாதவன் ⚫ 161

பாறையைக் கொத்திப் பார்த்த காகம்போல், நானும் வெறுப்படைந்து கௌதமரை விட்டுச் செல்கிறேன்!’ என்று அவன் புலம்பினான்.[1]

வானத்திலேயிருந்து பூமழை பொழிந்தது. ‘அவர் உறுதியுள்ள முனிவர்! விரைவிலே சத்தியத்தைக் கண்டு, அதன் ஒளியால், கதிரவனைப் போல, உலகின் இருளைக் கடிவார்!’ என்று தேவர்கள் ஆர்த்தனர்.

மாரனுடைய போராட்டங்களெல்லாம் மனத்துள் நடக்கும் போராட்டங்களே. காமம், குரோதம் முதலிய தீய குணங்களோடு போராடி வெற்றி கொள்வதையே இவை உருவகப்படுத்திக் கூறுகின்றன.

கௌதமர் அமர்ந்திருந்த புனிதத் தலத்தை[2] நிலமகள் முகம் அல்லது திலகத்திற்கு ஒப்பிடலாம். அது உலகின் நடுநாயகமான க்ஷேத்திரம். அங்கே அரசமரத்தின் நிழலிலே அறிவு துளிர்த்து மரமாக வளர்ந்து கொண்டிருந்தது. அம்மரம், உறுதியாகிய பூமியில் வேரோடி


  1. ‘லலிதவிஸ்தரம்’
  2. இந்தத் தலம் பின்னால், புத்தகயை என்று பெயர் பெற்றது போதி மரத்தின் அருகே கிழக்குப் பக்கத்தில் பிற்காலத்தில் அசோக சக்கிரவர்த்தி ஓர் ஆலயம் அமைத்தார். இப்போது அங்குள்ள ஆலயம் 160 அடி உயரம் உள்ளது. ஆலயத்தில் போதியடைந்த புத்தருடைய சிலை வைக்கப் பெற்றிருக்கிறது. இந்தத் தலத்திற்கு நம் நாட்டிலிருந்தும், இலங்கை, பர்மா, சீனா, சயாம், ஜப்பான் முதலிய நாடுகளிலிருந்தும் தினந்தோறும் யாத்திரிகர்கள் வணக்கத்திற்காகச் சென்று வருகின்றனர். பௌத்தர்கள் இதைப் பௌத்த தருமம் வளர்ந்த தொட்டில் என்று கருதி முதன்மையாகப் போற்றி வருகின்றனர்.