பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புத்தரின் அவதாரம் ⚫ 15

தினரைப் பற்றிக் கூறினான். பிரபாபாலர், தாம் உயர்ந்த க்ஷத்திரிய மரபிலேயே தோன்ற விரும்புவதாயும், பெற்றோர் ஒழுக்கமும் பண்பும் நிறைந்தவராயிருக்க வேண்டுமென்றும், நாட்டு மக்களும் அறத்தில் நாட்டமுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். முடிவில் சுவர்ணபூதி, ‘புராதனமான இக்ஷ்வாகு வமிசத்திலே தோன்றி, மக்களும் தேவரும் வணங்கத் தகுந்த சுத்தோதன மன்னர் கபிலவாஸ்து நகரில் செங்கோலோச்சி வருகிறார். அந்தக் குலத்தில் பிறக்கலாம்!’ என்று கூறினான். போதிசத்துவரும் அந்த யோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். தாய்வழியும் தந்தை வழியும் தலைமுறை தலைமுறையாக மாசு மருவின்றித் தூய்மையானவையென்றும், போதிசத்துவர் பிறப்பதற்குரிய அறுபத்து நான்கு உயரிய பண்புகளும் சுத்தோதனர் குலத்தில் விளங்குவதாயும், அவருடைய அன்புக்குரிய மாயாதேவி, அழகும் குணமும் ஒருங்கேயமைந்து, தம்மைக் கருவிலே தாங்குவதற்குரிய முப்பத்திரண்டு சீரிய பண்புகளையும் பெற்றிருப்பதாயும் கூறி, பிரபாபாலர் பூவுலகில் அவதரிக்கத் தீர்மானித்தார்.

போதிசத்துவர் பூவுலகை நோக்கி இறங்கிவருவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு, கபிலவாஸ்துவில் இராணி மாயா தன் கணவரிடம் பேசிக்கொண்டிருந்தாள். ‘மகாராஜா! இன்றிரவுமுதல் நான் கடுமையான நோன்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அது என் உள்ளத்தையும் உடலையும் தூய்மை செய்து கொள்வதற்குரிய நோன்பு. உயிர்களுக்கு உறுகண் செய்யாமை, பொய், பொறாமையாகிய தீக்குணங்களை விலக்கல், ஐம்புல இன்பங்களைத் துறத்தல், நன்மைகளை மேற்கொள்ளல் முதலிய எட்டு வகை விரதங்களைக் கடைப்பிடிக்க நான் உறுதிகொண்டுள்ளேன். எல்லா உயிர்களிடத்தும் என் உள்ளத்தில் அருள் சுரக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்!’ என்று மகாராணி கூறினாள். உடனே மன்னர், ‘உன் சித்தப்