பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போதி மாதவன் ⚫ 169

வனை நான் இரவும் பகலும் தேடியும் காணவில்லை. மீண்டும் மீண்டும் பிறப்பது துக்கமாயுள்ளது.[1]

‘குடிலைக் கட்டிய கொற்றனே![2] இப்போது உன்னைக் கண்டு கொண்டேன்! குடிலை மறுபடி நீ கட்ட முடியாது. உன்னுடைய உத்திரங்கள் எல்லாம் உடைந்துவிட்டன; குடிலின் முகடும் குலைந்துவிட்டது. என் சித்தம் நிருவாணப் பேற்றில் இலயித்துவிட்டது; (அதனால்) ஆசைகள் அவிந்தொழிந்துவிட்டன.[3]

போதியடைந்த புத்தர் பெருமான் ஏழு வாரங்கள் போதி மரத்தின் அடியிலும், அதன் பக்கங்களிலுமாகக் கழித்தார். அங்கயற் கண்ணி சுஜாதை அளித்த இன்னமுதுக்குப் பின்னால் அத்தனை வாரங்களிலும் அவர் உணவு கொள்ள வில்லை. நாள்தோறும் நெடுநேரம் அவர் சமாதியில் அமர்ந்திருந்து, உலக நிகழ்ச்சிகளையும், ஜீவன்கள் படும் அவதிகளையும் அறிவுக் கண்ணால் பார்வையிட்டு வந்தார். அவர் உள்ளத்திலே இன்பம் தேங்கி நின்று திளைத்துக் கொண்டிருந்தது. போக்குவரவற்ற பூரண நிலையை அவர் பெற்றிருந்தார். அவருடைய பனிமதி முகத்திலே புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.


  1. தம்மபதம். 153.ஆவது சூத்திரம்.
  2. ஆசையே உடலாகிய குடிலைக்கட்டிய கொற்றனாக உருவகப்படுத்திக் கூறப்படுகின்றது.
  3. தம்மபதம், 154-ஆவது சூத்திரம்.

போ-11