பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 ⚫ போதி மாதவன்

வெற்றியாளர் அழியாவாழ்வு என்று அறிந்ததை, அவன் மரணம் என்று கருதுவான்.

வெறுப்புக்கும் விருப்புக்கும் அடிமைப்பட்டுள்ளவனுக்கு உண்மை மறைந்தே நிற்கும். மேகங்கள் சூழ்ந்தது போல், உலக ஆசைகள் அடர்ந்துள்ள, பேதைமையுள்ள மனத்திற்கு நிருவாண முக்தி உணர்ந்து கொள்ள முடியாத மர்மமாகவேயிருக்கும்.

‘நான் தரும உபதேசம் செய்து, மனிதகுலம் அதைப் புரிந்து கொள்ளாவிடில், எனக்குக் களைப்பும் சிரமமுமே மிச்சமாகும்.[1]

அந்த நிலையில் மகா பிரும்மா தேவருலகிலிருந்து இறங்கி வந்து, மனித குலத்திற்காக மனம் இரங்கித் தமது தருமத்தை உபதேசிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மக்கள் வீணாக அழிந்துவிடுவர் என்றும் புத்தர் பிரானை வேண்டிக் கொண்டார்.

‘உலகில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் உலக பாசங்களைக் கடந்தவர்கள். அவர்களுக்குத் தரும உபதேசம் செய்யாவிடில், அவர்களை நாம் இழக்க நேரும். அவர்கள் அறிவுரையைக் கேட்டால், அதை நம்பி உய்ந்து கொள்வார்கள்!’ என்று அவர் கூறினார்.

பகவரும் அங்கிருந்தபடியே உலகை மக்களை அறிவுக் கண்ணால் நோக்கிக் கவனித்தார். சிலருடைய உள்ளங்களை உலகப் பற்றுக்கள் கவராமல் இருந்ததைக் கண்டார். காமம், பாவம் முதலியவற்றின் துயரங்களை அறிந்த சிலர் இருந்தனர்.


  1. ‘மகாவக்கம்’