பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போதி மாதவன் ⚫ 173

அப்போது அவர், ‘கேள்விக்கு ஏற்ற செவிகளையுடை யவர்களுக்கு நித்திய வாழ்வின் கதவை விசாலமாகத் திறந்து வைக்கிறேன். தருமத்தை அவர்கள் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளட்டும்!’ என்று கூறினார்.

அதைக் கேட்டுப் பிரும்மா தம் கருத்து நிறைவேறி விட்டது என்று மகிழ்ச்சியடைந்தார்.

‘தருமத்தை நான் முதலில் யாருக்குப் பிரசாரம் செய்யலாம்?’ என்று புத்தர் பிரான் எண்ணும்போது, ஆலாரகாலாமர், உருத்திரகர் இருவரைப் பற்றியும் கருதினார். இவ்விருவரும் ஆனந்தத்தோடு தமது தருமத்தை ஏற்றுக் கொள்வர் என்று அவர் எண்ணினார். ஆலார காலாமர் ஏழு நாட்களுக்கு முன்பு இறந்து போன தாயும், உருத்திரகர் முந்திய நாள் மாலையில் மரித்து விட்டதாயும் பிரும்மா கூறினார்.

அடுத்தாற்போல் பகவர் உருவேலா வனத்தில் தம்மோடு இருந்த ஐந்து தாபதர்களைப் பற்றி எண்ணமிட்டார். அவர்களைத் தேடிச்சென்று, என் விடுதலை மார்க்கத்தை முதன்முறையாக அவர்களுக்கே உபதேசம் செய்கிறேன்!’ என்று அவர் கூறிக்கொண்டார்.

காசி யாத்திரை

அக்காலத்தில் அந்த ஐந்து சீடர்களும் கங்கை நதிக் கரைகளிலிருந்த காசிமாநகரில், சாரநாத்[1] என்னுமிடத்தில் ‘மிருகதாவனம்’ என்ற மான் தோட்டத்தில் தங்கியிருந்தனர். புத்தர் தாம் ஜீவ-மரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள் தம்மைக் கைவிட்டுச் சென்றதை எண்ணாமல், அவர்கள் முன்னால்


  1. இதற்கு இஸிபதனம் என்றும் பெயருண்டு.