பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாம் இயல்

அற ஆழி உருட்டுதல்

‘தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்[1]
அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டிக்
காமற் கடந்த வாமன்......’

–மணிமேகலை


பெரும் புகழ் பெற்ற பார்த்திபர் பிரசேனஜித்தின் கோசல இராஜ்யத்திலே தலைநகர் சிராவஸ்தியும், சாகேதம் என்ற அயோத்தியும், வாரணாசி என்ற காசி மாநகரும் செல்வமும் செழிப்புமுள்ள பெருநகரங்களா யிருந்தன. இவற்றில் காசி மாநகர், செல்வமும் தொழில்களும் சிறந்திருந்ததோடு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாரத நாட்டின் ஒப்புயர்வற்ற புனிதத் தலமாகவும், பூவுலகின் புராதன நகரங்களுள் ஒன்றாகவும் விளங்குவது. புராதன காலத்தில் தோன்றிய புத்தர்கள் ஒவ்வொருவரும் அங்கேதான் முதல் முதல் அறவுரை புகன்றதாயும் கூறுவர். காசியில் வசித்தாலே கைலாயம் கிட்டிவிடும் என்பது தொன்று தொட்டே இந்துக்களின் நம்பிக்கையாகும். கங்கைக் கரையிலே மங்கலம் ஓங்கும் மணிமண்டபங்களும், ஆலயங்களும், அரண்மனைகளும் நிறைந்திருந்த அந்நகரில் எந்த நேரமும் வேத கீதங்களும், வேத பாராயணமும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். சாதுக்களும், சந்நியாசிகளும், யாத்திரிகர்களும், பிச்சைக்


  1. பூட்கையின்- கொள்கையின்.