பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 177

காரர்களும் கங்கைக் கரையின் கட்டங்களில் பல்லாயிரக்கணக்காகக் குழுமியிருப்பார்கள். கங்கை புனிதமான நதி. அதில் ஒருமுறை நீராடினாலே முன் செய்த பாபங்களெல்லாம் போகும் என்று மக்கள் அதில் குளிப்பதுடன், செம்புகளில் கங்கை நீரைத் தத்தம் ஊர்களுக்கும் எடுத்து செல்வார்கள். காசி எப்பொழுதுமே கலைகளின் இருப்பிடமாயும், கல்வியின் நிலையமாயும், தத்துவ ஞானக் களஞ்சியமாயும் விளங்கி வந்திருக்கின்றது.

பிறவிப்பிணி மருத்துவரான புத்ததேவரும் காசியை நோக்கிச் சென்றதில் வியப்பொன்றும் இல்லை. காசியிலே செய்த உபதேசம் காசினியெல்லாம் பரவிவிடும் என்ற நம்பிக்கையோடு, அவர் தமது தருமம் பற்றிய முதல் உபதேசத்தை அங்கேயே நிகழ்த்தத் தீர்மானித்திருந்தார். காசியை அடைந்த அன்று மாலையிலும் இரவிலும் ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து விட்டு, மறுநாள் காலையில் அவர் தம் பழைய சீடர்கள் ஐவரையும் தேடிக் கொண்டு அருகேயிருந்த சாரநாத்தை[1] அடைந்தார். அங்கே கௌண்டின்யர் முதலிய ஐந்து சீடர்களும், தூரத்திலிருந்தே கௌதம புத்தரின் வருகையைக் கண்டு கொண்டனர்.

மான்சோலை

தமது ஞான ஆசிரியர் தம்மைத் தேடி வருவதைப் பொருட்படுத்தாமல், அவரை வரவேற்று உபசரிக்காமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர். அத்தகைய சீடர்களைத் தேடி அண்ணல் தம் அடிகள் வருந்தும்படி நடந்து வந்தது ஏன்? அத்தகைய சீடர்களே அவருக்குத் தேவையாயிருந்தனர்.


  1. சாரநாத் பனாரஸ் கண்டோன்மென்டு ரயில் நிலையத்திலிருந்து ஆறு மைல் காரக்கிலிருக்கிறது.