பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 ⚫ போதி மாதவன்

படியே நடக்கட்டும்! நீ விரும்பிய வண்ணமே செய்வாயாக! உனது நோன்புக்கு இடையூறு ஏற்படுவதைவிட எனது ராஜ்யத்தையே இழந்து விடத் தயாராவேன்!’ என்றார். அந்தக் கணத்திலேயே அவர் தமது ஆசனத்தை விட்டெழுந்து விலகிச்சென்று, மாயாதேவியைத் தமது தாய் அல்லது தமக்கையென்று கருத ஆரம்பித்தார்; தமது உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டார். இதன் பின்னரே பிரபாபால போதிசத்துவர் ஆவிரூபமாக வந்து, மாயாதேவியின் மணி வயிற்றில் வலது புறமாகப் புகுந்து, அங்கே பூரண சாந்தியுடன் கோயில் கொண்டிருந்தார். போதிசத்துவர் வெள்ளை யானை உருவில் மண்ணுலகுக்கு இறங்கிவந்ததாகக் கதைகள் கூறும். வெள்ளை யானை அறிவுக்கும் ஆற்றலுக்கும் அறிகுறி.

போதிசத்துவர் பூமியில் வந்து சேர்ந்ததும் உலக மெங்கும் ஒரு பேரொளி துலங்கிற்று. அதனால், என்றுமே இருள் நிறைந்த மலைக் கணவாய்கள் கூடச் சோதி மயமாக விளங்கின. மக்களும், தேவரும், சமணரும், சதுர்மறையோரும், மாரனும், பிரமனும்யாவருமே அவ்வொளியைக் கண்டு வியந்தனர். ‘ஏது இந்தப் பேரொளி? இது எதற்கு அறிகுறி?’ என்று கண்டவரெல்லோரும் அதிசயித்துக் கேட்டனர். உடனே பூமி ஆறுமுறை அதிர்ந்தது. மலைகள் குலுங்கின, கடல்கள் குமுறின, ஆறுகளெல்லாம் வந்தவழியே திரும்பி மலைகளை நோக்கி ஓடின. வனங்களும் மரங்களும், செடிகளும், வண்ண வண்ணமான தங்கள் மலர்களையெல்லாம் மண் மீது தூவின. மண்ணும், விண்ணும் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்ததோடு, நீங்காத் துன்பம் நிறைந்த நிரயங்களும் இன்பத்தில் திளைத்தன, பேரொளி தோன்றியது. போதிசத்துவர் மெஞ் ஞானப் பேறுபெற்று, மண்ணக மக்களின் உள்ளங்களிலுள்ள அறியாமையிருள் அகலும்படி தம்முடைய நான்கு வாய்மைகளையும் போதித்து, அறிவுரை பகர்-