பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 ⚫ போதி மாதவன்

னடக்கம் வேண்டும்; ஆசைக்காட்டை அழித்துக் கணமேனும் நேரம் வீணாகதபடி கருத்தோடு முயலவேண்டும்–இவைகளால் மாரனை வெல்லலாம்; கூற்றையும் ஆடல் கொண்டு அழியா வாழ்வு பெறலாம் என்பதே அவர் சித்தாந்தம்.

‘பிறவி ஏற்படக் காரணமாகிய விதிகளைப் பற்றி விவாதம் செல்யக் கூடிய அறிவாளர் அனேகர் இங்கே இருக்கின்றனர்; ஆனால் பிறப்பை நிறுத்தும் வழியை அறிந்தவர் ஒருவர் கூட இல்லை !’ என்று புத்தர் சீடர்களுக்குக் கூறினார்.

‘உலக வாழ்வாகிய பெரிய விஷ விருட்சத்திற்கு வேராக அமைந்துள்ளது பேதைமை...’ என்று அவர் எடுத்துக் காட்டினார்.

தம்முடைய தருமத்தைப் பரிசுத்தமான உள்ளத்தோடு செவிமடுப்பவனே மக்களுக்குத் தலைசிறந்த வழிகாட்டி என்றும், அவனுக்கு நிகரில்லை என்றும், அவன் அழியாத சோதிமயமான ஆபரணம் என்றும் அவர் கூறினார். சகல ஜீவர்களிடத்தும் அருள் சுரந்து புத்தர்கள் உபதேசித்த ஒப்பற்ற தருமம் எந்த வீட்டில் நிலைத்திருக்கிறதோ, அந்த வீட்டிலே வசிப்பவன் கூட அதனால் ததாகதனாகி விடுவான் என்றும் அவர் அருளினார்.

அண்ணலின் அறிவுரையைக் கேட்ட சீடர் ஐவரில் கௌண்டின்யர் என்ற முதியோர், தருமத்தை அறிந்து, அதிலே ஆழ்ந்து நிலைத்து நின்று ஐயம், திரிபு, மயக்கம் நீங்கித் தவத்திறம் பூண்டு, பவத்திறம் அறுத்து, உய்வு பெற வேண்டும் என்று உறுதியடைந்து, புத்தர் முன்பு சென்று அடிபணிந்து நின்றார். ‘இறைவ! என்னைப் பகவர் ஆட்கொண்டு தருமத்தில் சேர்த்துக் கொண்டு அருள்புரிய இயலுமோ?’ என்று வேண்டினார்.