பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேணு வனம் ⚫ 205

ஞானியாயும், புகழ்பெற்ற முனிவராயும் விளங்கிய அக்கினி காசியபருக்கு முதலில் தரும உபதேசம் செய்ய வேண்டும் என்று பகவர் திருவுளம் கொண்டிருந்தார்.

அக்கினி காசியபர்

உருவேலாவில் காசியபருடைய தவப்பள்ளியை அடைந்து, ததாகதர் அம்முனிவரைச் சந்தித்தார். அன்று தாம் அங்கு தங்க விழைவதாகவும், முனிவர் அக்கினி வழிபாடு செய்யும் குகையிலேயிருந்து கங்குற்பொழுதைக் கழிக்க இடம் வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முனிவரும் அதற்கு இசைந்தார் ஆனால் அங்கே ஒரு கொடிய விடநாகம் தங்கியிருப்பதாயும், அது எந்த மனிதரையும் கொன்று விடும் என்று தாம் அஞ்சுவதாயும் கூறினார். அதைக் கேட்ட பின்னும் ததாகதர் அங்கேயே தங்க விரும்பியதால், முனிவரும் அனுமதியளித்து விட்டார்.

அந்தக் குகையுள் சென்றதும், ததாகதர் நிமிர்ந்து அமர்ந்து, விழிப்புடன் நாலுபுறத்திலும் அறிவைச் செலுத்திக் கொண்டிருந்தார்.

இரவிலே நாகம் வெளிப்பட்டு, நஞ்சைக் கக்கிக் கொண்டு சீறி வந்தது. குகை முழுவதும் விஷப் புகையும் அனலும் நிறைந்தன. ததாகதர், எதுவும் நிகழ்ந்திராதது போல, அமைதியோடு அமர்ந்திருந்தார். அனலை அனல் விழுங்கிற்று; புகையைப் புகையே தீர்த்து விட்டது! நாகம் கடும் சீற்றமடைந்து, தான் தன் சீற்றத்திற்கே இரையாகி மடிந்தது.

இரவிலே கண் விழித்துப் பார்த்த காசியபர் குகையுள் வெளிச்சத்தைக் கண்டு, ‘அந்தோ! சுந்தரவதனத்துடன் விளங்கும் சாக்கியமுனி சர்ப்பத்துக்கு இரையாகி விடுவாரே!’ என்று வருந்தினார்.