பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேணு வனம் ⚫ 209

உயரிய வாய்மைகளையும் உணர்ந்து கொண்டு, அஷ்டாங்க மார்க்கத்தைப் பின்பற்றி ஒழுகுவான். கண், காது முதலிய பொறிகளிலும், புலன்களிலும், அவைகளால் உணரப் பெறும் பொருள்கள், உருவங்களிலும், மனத்திலும், அதில் தோன்றும் கருத்துக்களிலும், மன உணர்விலும் அருவருப்படைவான். இந்த அருவருப்புக் காரணமாகக் காமம் முதலிய உணர்ச்சிகளை நீக்குவான்; அதனால் விடுதலை பெறுவான். விடுதலை பெற்றதும் அந்நிலையை உணர்வான்; தனக்கு மேற்கொண்டு பிறப்பில்லை என்றும், தான் செய்ய வேண்டியதைச் செய்து புனித வாழ்வு வாழ்ந்தாயிற்று என்றும், இவ்வுலகில் தன் வேலை முடிந்தது என்றும் அவன் அறிந்து கொள்வான்.’[1]

சீடர்கள் யாவரும் இப் புனித உரையைக் கேட்டு. உளமகிழ்ந்து, புத்த, தரும சங்கத்தில் நிலைத்து நின்றனர்.

உருவேலாவில் சிறிது காலம் தங்கியிருந்து, பின்னர் புத்ததேவர் முன்னால் பிம்பிசார மன்னர்க்குத் தாம் அளித்திருந்த வாக்கை நிறைவேற்றுவதற்காக இராஜ கிருக நகரை நோக்கிப் புறப்பட்டார். அவரோடு அக்கினி காசியபரும், நூற்றுக்கணக்கான பிக்குக்களும் சென்றனர்.

இராஜகிருகம்

போதி நாதரும் பிக்குக்களும் தமது தலைநகருக்கு வருவதை அறிந்த மகத மன்னர் பிம்பிசாரர், மந்திரிகள்,


  1. ‘மகாவக்கம்.’