பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேணு வனம் ⚫ 211

புரிந்துகொண்டால், பின்னர் எல்லாம் தெளிவாகி விடும்.

‘ஒருவன் தன் உண்மை இயல்பை அறிந்து, தன் பொறிகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை உணர்ந்து கொண்டால், பிறகு “நான்” என்று சொல்லிக் கொள்வதற்கு இடமில்லாமற் போவதை அறிவான். அதன் மூலம் அந்தமில்லாத அமைதியைப் பெறுவான். உலகம் “நான்” என்பதைப் பற்றிக் கொண்டிருப்பதாலேயே தவறான காட்சிகள் ஏற்படுகின்றன.

‘சிலர், மரணத்திற்குப் பின்னும் “நான்” நிலைத்து நிற்பதாயும், சிலர், அதுவும் மரித்து விடுவதாயும் கூறுவர். இருதிறத்தாருடைய கருத்தும் தவறானது; அவர்களுடைய தவறு பெருந் தவறாகும்.

“ஏனெனில், “நான்” அற்றுப்போகும் என்று அவர்கள் சொன்னால், அவர்கள் அடைய வேண்டும் என்று கருதி முயன்ற பயனும் அத்துடன் அழிந்து விடுகின்றது; - பின்னால் தொடர்பில்லாமற் போகின்றது.

‘மற்றொரு புறத்தில், “நான்” அழிவதில்லை என்று சொல்லுபவர்களுடைய கூற்றின் படி, வாழ்விலும் மரணத்திலும் மாறுதலில்லாத ஒரே தன்மை நிலைத்திருப்பதாகும்-அதற்குத் தோற்றமுமில்லை; முடிவுமில்லை. அவர்களுடைய “நான்” இத்தகையது என்றால், அதுவே நிறைவுள்ளதாயிருக்கும். கருமங்களின் மூலம் அதைச் செம்மைப்படுத்த முடியாது. நிரந்தரமான,