பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212 ⚫ போதி மாதவன்

அழிவற்ற “நான்” என்பதை ஒருக்காலும் மாற்றவே முடியாது. அதுவே தலைவனாகத் தலைமையில் நிற்கும்; அத்தகைய பூரணமானதை மேலும் பூரணமாக்குதல் பயனற்ற வேலை; எனவே ஒழுக்க விதிகளும், முக்தியுமே தேவை யில்லாமற் போகின்றன.

‘ஆனால் (வாழ்க்கையில் ) நாம் இன்பங்களையும் துன்பங்களையும் காண்கிறோம். நம் செயல்களையெல்லாம் “நான்” என்பதே செய்வதாயிருக்கவேண்டும்; இல்லையெனில் “நான்” என்பதும் இல்லை; செயலுக்குப் பின்னால் அதைப் புரிந்தவன் இல்லை. அறிவுக்குப் பின்னால் அதைப் புரிந்தவன் இல்லை; அறிவுக்குப் பின்னால் அறிந்தவனில்லை. வாழ்வைத் தலைமையில் நின்று நடத்துவோனும் இல்லை.

‘கவனமாய்க் கேளுங்கள்! பொறிகள் ஒரு பொருளைச் சந்திக்கின்றன. அந்தச் சம்பந்தத்தினால் உணர்வு தோன்றுகிறது; அதிலிருந்து நினைவு எழும்புகின்றது; பூதக் கண்ணாடியைக் கதிர் ஒளியில் காட்டினால், ஒளியின் சக்தியால் தீ உண்டாதல் போலப் பொறியும் பொருளும் கொள்ளும் சம்பந்தத்தில் ஏற்படும் அறிவினால் “நான்” என்று அழைக்கப் பெறும் அகங்காரம் தோன்றுகின்றது, விதையிலிருந்து தான் முளை உண்டாகின்றது, விதை முளையன்று, இரண்டும் ஒன்றல்ல, எனினும் இரண்டும் வேறுபட்டவையும் அல்ல! இவ்வாறே தோன்றுகின்றது ஜீவன்.

“நான்” என்னும் அகங்காரத்திற்கு அடிமைகளாகிக் காலையிருந்து இரவுவரை