பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 ⚫ போதி மாதவன்

பரமார்த்தர் பரிவுடன் அருளிய அறிவுரையைக் கேட்டு மக்களும் மன்னரும் பெருமகிழ்வுற்றனர். பிம்பிசாரர் அதை மனத்தில் பதிய வைத்துக்கொண்டு, ஐயம் நீங்கித் தெளிவு பெற்று, எழுந்து நின்று ஐயனை வணங்கினார். தாம் இளவரசராயிருந்த காலையில் ஐந்து ஆசைகள் கொண்டிருந்ததாயும், தாம் மகிபராக வேண்டும் என்றும், தமது ஆட்சிக்காலத்தில் வையகத்தில் புத்தர் அவதரித்தால், அவர் தமது இராஜ்யத்திற்கு எழுந்தருள வேண்டும் என்றும், தாம் அவரை வணங்க வேண்டும் என்றும் பகவர் தமக்கு அறத்தினைப் போதிக்க வேண்டும் என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய தருமத்தைத் தாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கருதியிருந்த அந்த ஐந்து விருப்பங்களும் நிறை வேறிவிட்டன என்றும் அவர் கூறி மகிழ்ந்தார்.

அறவாழி அந்தணர் கூறிய அறமே அனைத்தினும் சிறந்த அறம் என்று அவர் போற்றினார். இருளிடையே இடர்ப்பட்டுத் திரிபவர்களுக்குப் பகவர் அளித்த விளக்கின் ஒளி வழிகாட்டும் என்றும், கண்ணுடையோர் அனைவரும் அதன் பயனை அடையலாம் என்றும் கூறிவிட்டு, அவர், நான் புத்தரிடம் சரணடைகிறேன்! நான் தருமத்திடம் சரணடைகிறேன்! நான் சங்கத்திடம் சரணடைகிறேன்!’ என்று மும்மைச் சரணங்களையும் மொழிந்து புத்தரின் சீடரானார். அருள் வள்ளல் மறு நாள் தமது அரண்மனையில் அமுது செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டிக் கொண்டார்.

ததாகதர் தமது தவமகிமையாலும், மாசிலாத சீலத்தாலும் யாவருடைய மனங்களையும் கவர்ந்து தம்பால் ஈர்த்துக்கொண்டு, உண்மையை அவர்கள் உணரும்படி செய்தார். இராஜ்யம் முழுவதும் இன்னருளின் விதைகள் பரவி வேரூன்ற வழி கோலப்பெற்றது.