பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேணு வனம் ⚫ 215

பிக்குக்கள் பலரும் பின் தொடர, முன்னும் பின்னும் சாந்தி நிலவும்படி, கையிலே திருவோடு ஏந்தி, இராஜ கிருக வீதிகளின் வழியாகத் தருமராஜர் நடந்து சென்று அரண்மனையை அடைந்தார். அவருடைய மகிமைக்கு ஏற்ற உணவு வகைகளை மன்னர் தயாரித்தார். எல்லோரும் அமுது செய்தபின், பெருமானின் அருகே அமர்ந்திருந்த அரசர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அவருக்குக் கிடைத்தற்கரிய பெரும் பேறு கிடைத்திருந்தது. போதி யடைந்ததும் போதி வேந்தர் அங்கு விஜயம் செய்திருந்தார். இராஜகிருகம் செய்த எல்லையற்ற தவத்தால் அது பௌத்த தருமத்தின் வளர்ப்புப் பண்ணையாக விளங்கப் போகிறது! எனவே போதிநாதர் எப்போது வந்தாலும் தங்கியிருந்து தருமம் போதிப்பதற்கு ஏற்ற தவப்பள்ளி ஒன்றை அமைக்கவேண்டும். அதற்கு ஏற்ற சோலை ஒன்று வேண்டும்; அது நகருக்கு வெளியே இருக்க வேண்டும். அத்தகைய பெரிய சோலை எது என்பதைப் பற்றியே அரசர் சிந்தித்துக் கொண்டிருந்தார். கடைசியில் தாம் அருமையுடன் போற்றிவந்த தமது வேணு வனத்தையே[1] பௌத்த சங்கத்திற்கு அளித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே பெருமானிடம் விவரத்தைக் கூறி, தமது எழில் மிகுந்த சோலையை ஏற்றருளுமாறு வேண்டினார். பெருமானும் அன்புடன் அதை ஏற்றுக்கொண்டு அரசருக்கு ஆசிகள் கூறினார்; மேலும் அவருக்குக் கூற வேண்டிய நீதிகள் பலவும், எடுத்துச் சொல்லி அவர் உள்ளத்தைப் பவித்திரமாக்கினார். பிறகு விடை பெற்றுக்கொண்டு, அரண்மனையிலிருந்து வெளியே சென்றார்.


  1. வேணுவனம்–மூங்கில் அடர்ந்த சோலை; (வேணு–மூங்கில்)