பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 ⚫ போதி மாதவன்

ஒருநாள் மாலை அரசரும் தேவியர்களும் அங்கு வந்து இளைப்பாறுகையில் மன்னர் உறங்கிவிட்டார். தேவியரில் ஒருத்தி தவிர மற்றையோர் தூரத்திலே உலாவிக் கொண்டிருந்தனர். அவளும் கண்ணயர்ந்து போனாள். அந்த நேரத்தில் நாகம் அவ்வழியாக மன்னர் அருகில் ஊர்ந்து வந்தது. அதைக் கண்ட பறவைகள் யாவும் கூக்குரலிட்டுக் கூவின என்றும், உடனே தேவி கண் விழித்துப் பாம்பைக் கொன்றனள் என்றும் சொல்லப்படுகிறது. மன்னர் விழிப்படைந்தபின், பறவைகள் காலத்திலே செய்த உதவிக்காக, அவ்வனத்தில் அவைகள் பிரியமாக வந்து தங்குவதற்காக ஏராளமான மூங்கில்களை வைத்து வளர்த்தார். மூங்கில் நிறைந்திருந்ததால் அவ்வனத்திற்கு ‘வேணு வனம்’ என்ற பெயர் பெயர் உண்டாயிற்றாம்.

வேணு வனத்தில் பிம்பிசாரர் விரைவாக ஒரு விகாரையைக் கட்டி, அதிலேயே பிக்குக்கள் அனைவரும் தங்கி யிருக்க வசதிகள் செய்து கொடுத்தார். வேணு வனத்தில், புத்தர் பெருமான் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து அறவுரை புகன்று வந்தார். தொள்ளாயிரம் பிக்குக்களும் ஆயிரக்கணக்கான பௌத்த உபாசகர்களும்[1] அக்காலத்திலே சேர்ந்திருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

முதன்மையான மூன்று சீடர்கள்

அக்காலத்தில் பிக்குக்களாகச் சேர்ந்தவர்களில் முதன்மையானவர் மூவர். அவர்களே சாரீபுத்திரரும், மௌத் கல்யாயனர் என்ற மொக்கலன்னாவும், காசியபர் அக்கினி தத்தரும். இவர்களில் சாரீபுத்திரரும், மௌத்கல்யாயனரும் இளமையிலிருந்தே நகமும் சதையும் போல் நெருங்கிய


  1. உபாசகர்கள் - குடும்பத்தில் இருந்துகொண்டு கருமத்தை மேற்கொள்பர்கள்.