பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220 ⚫ போதி மாதவன்

வேண்டிய சாத்திரங்கள் பலவற்றையும் அவர் பயின்றிருந்தார்.

மௌத்கல்யாயனரும் அருகேயிருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையார் கௌண்டின்ய போதாலர் என்ற மன்னரின் புரோகிதராயிருந்தவர். அவருடைய அன்னையின் பெயர் மோத்கல். அவருக்கு மௌத் கல்யாயனர் என்பது குடும்பப் பெயராக அமைந்தது; அவருடைய இயற்பெயர் கோலிதர். அவரும் இளமையிலிருந்தே சாரீபுத்திரருடன் சேர்ந்து கல்வி கற்றுச் சகல கலா வல்லவராக விளங்கினார்.

இவ்விருவரும் பள்ளித் தோழர்களாகப் பழகி வந்ததில், பின்னால் மௌத்கல்யாயனர் துறவறம் மேற்கொள்ளத் தீர்மானிக்கையில் சாரீபுத்திரரும் துறவியாகி விட்டார். இருவரும் இராஜகிருக நகரிலிருந்த சஞ்சயர்[1] என்ற புகழ் பெற்ற குருவிடம் உபதேசம் பெற்று வந்தனர். சஞ்சயர் காலமான பின்னர், அவருடைய சீடர்கள் இருநூற்றைம்பது பேர்களுக்கும் அவர்கள் இருவருவமே தலைவராக விளங்கி வந்தனர். அவர்களைப் பற்றி இங்கே விரிவாகக் குறிப்பிட வேண்டிய காரணம் யாதெனில், அவர்களே பின்னால் பௌத்த தருமத்தின் இரு தூண்களாக விளங்கி வந்தார்கள். புத்த பெருமானுக்கு அவர்கள் இரு கரங்களைப் போல உதவி வந்தனர். அவர்கள் புத்தரைச் சரணடைந்த வரலாறே அவர்களது இயல்பை நன்கு உணர்த்துவதாயுள்ளது.

ஒருநாள் இராஜகிருக வீதியிலே புத்தருடைய ஆரம்பச் சீடர்கள் ஐவருள் ஒருவராகிய அசுவஜித் கையிலே திருவோடு தாங்கிப் பிச்சையேற்று வருகையில்


  1. சஞ்சயருக்குப் பதிலாகக் கபிலர் என்றும் கூறுவதுண்டு.