பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேணு வனம் ⚫ 221

சாரீபுத்திரர் அவருடைய ஒளி நிறைந்த முகத்தையும், அமைதியையும் கண்டு திகைத்து நின்றார். அவர் அண்டையில் சென்று அவர் யார் என்றும், அவர் சீடர்களைச் சேர்த்துக்கொண்டு உபதேசம் செய்கிறாரா என்றும் வினவினார். அசுவஜித் தாமே ஒரு குருவுக்குச் சீடர் என்று கூறினார்.

‘தங்களுடைய குரு யாவர்? அவர் திருநாமம் என்ன?’

‘சாக்கிய மரபிலே தோன்றிய புகழ் பெற்ற முதன்மையான சிரமணரே எனது குரு!’

‘அவர் உங்களைப்போன்ற பெருமையும் கம்பீரமும் பெற்று விளங்குபவரா?’

‘கடுகுக்கும் மேரு மலைக்கும், பசுவின் குழம்பு பதிந்த பள்ளத்தில் தேங்கும் தண்ணீருக்கும் கடலுக்கும், கொசுவுக்கும் கருடனுக்கும். எவ்வளவு வேற்றுமையுண்டோ அவ்வளவு எனக்கும் என் குருநாதருக்கும் உண்டு!’

‘நான் எப்போதுமே அறிவுக்குப் பொருத்தமான உண்மையையே விரும்புபவன்; சொற்களையும் வாக்கியக் குவியல்களையும் பற்றி நான் கவனிப்பதில்லை; ஏனெனில் ஞானி தீர்க்கமான அறிவைக் கொண்டே தன் வாழ்வை அமைத்துக்கொள்கிறான் தங்களுடைய குருநாதருடைய கொள்கையைத் தாங்கள் விளக்கிச் சொல்ல வேண்டுகிறேன்.’

‘நானே சமீபத்தில்தான் அவரிடம் உபதேசம் பெற்றவன். கேட்கவேண்டியதை அவருடைய திருவாயிலி லிருந்தே நேரில் கேட்பது நலம். சுருக்கமாய்ச் சொன்னால்,