பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222 ⚫ போதி மாதவன்


“யேதர்மா ஹேதுப்ரபாவா: தேஷாம்ஹேதும் ததாகத;
ஆஹதேஷா யோநிரோத்: ஏவம்வாதீ மஹாஸமண:”

[1]

[“காரணம் ஒன்றிலிருந்து எந்தத் தன்மைகள் ஏற்படுகின்றனவோ, அவைகளின் காரணத்தைத் ததாகதர் கூறினார்; அதை அடக்கும் முறையையும் அந்த மகாசிரமணர் கற்பித்துள்ளார்.”]

என்று சொல்லிவிடலாம்.

இதைக் கேட்ட சாரீபுத்திரர், ‘போதுமே! இந்த ஒரு சுலோகமே தங்களுடைய குருவின் மேன்மையை எடுத்துக் காட்டப் போதுமானது! ஆம், உலகிலே எல்லாம் காரணத்தாலேயே – ஏதுவாலேயே – தோன்றுகின்றன. காரணத்தை அறிந்து நீக்கிவிட்டால், காரியமும் இராது!’ என்று தமக்குள் பாராட்டிப் பேசிக்கொண்டார்.

‘கதிரவன் ஒளிவந்த பிறகு எவரேனும் விளக்கினைத் தேடுவரோ? புத்தரின் போதனை துக்கத்தின் வேரையே அறுத்து விடுவதாகும்!’ என்று கருதி அவர் பிக்குவை வணங்கி விடை பெற்றுக்கொண்டு சென்றார்.

அவர் நேராக வீட்டுக்குத் திரும்பிச் சென்றார். அவருடைய அகமும் முகமும் மலர்ந்து விளங்கின.


  1. பௌத்த தருமத்தின் சாரத்தை உணர்த்தும் சுலோகமாக இது கருதப்படுகிறது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு. வருமாறு:

    ‘Of those conditions which spring from a cause
    The cause has been told by Tathagata ;
    And the manner of Suppression
    The great Samana has like wise taught.’