பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேணு வனம் ⚫ 225

ளெல்லாம் அமைந்த கற்புக்கரசி. அவர் முக்தியை நாடி, வீடு செல்வம் அனைத்தையும் நீத்துத் துறவறம் மேற்கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் வைசாலி நகருக்குப் புறப்பட்டுச் செல்லும் பாதையிலே, கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோரான புத்தரைக் கண்ணுற்றதும், அவரை அடி வணங்கி, ‘பெருந்தகை வள்ளலே! நீரே எமது குரு; யான். உம் அடியாருள் ஒருவன்!’ என்று கூறினார்.

துறவறத்தாலே உழன்று பெரும் பாடுபட்டு உண்மை நெறியை அறிந்துகொள்ள உள்ளன்போடு முயன்று கொண்டிருந்த அந்த ‘அந்தணாளரையும் அறவோர் தமது சங்கத்திலே சேர்த்துக்கொண்டு, அவர் உய்யும் பொருட்டு அருளுரைகள் வழங்கினார். இந்தக் காசியபரே பிற் காலத்தில் ‘மகா காசியபர்’ என்று பெரும்புகழ் பெற்று விளங்கிய மேதை. ஐயனுக்கு அவரிடம் அளவற்ற அன்பு இருந்து வந்தது. புத்தருக்குப் பின்னால் அவருடைய அறிவுரைகளைத் தொகுத்துத் திரிபிடங்களாக அமைத்து வைத்த பெருமையிலே பெரும்பகுதி மகா காசியபரையே சேரும். இத்தகைய மகான்களும், மதிவாணர்களும், ஆறுகள் : அலை கடலை நாடி அடைவதுபோல், அருள்நெறி காக்கும் ஐயனை அடைந்து, அருளறத்தை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

நாள்தோறும் இளைஞர்களும் பெரியோர்களும் பகவரைச் சரணடைந்து துறவிகளாகி வந்ததைக் கண்ட இராஜகிருக மக்கள் கவலை கொண்டனர். திடீர் திடீரென்று பல ஆடவர்கள் வீடு வாசல்களையும், மனைவி மக்களையும் விட்டுப் பிரிந்து, தலைகளை மழித்துக் கொண்டு, வேணுவனத்திற்கு ஓடிவிடுவதைக் கண்டு சிலர் பிக்குக்களையே வெறுத்துப் பேசினர். இவ்வாறு பேசிய பேச்சுக்களைப் பற்றிப் பிக்குக்கள் பகவரிடம் தெரிவித்த போது அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்: