பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பன்னிரண்டாம் இயல்

அநாத பிண்டிகர்

‘அருளாழி நயந்தோய் நீஇ !
அறவாழி பயந்தோய் நீஇ !
மருளாழி துறந்தோய் நீஇ !
மாதவரில் மாதவன் நீஇ !
வானவருள் வானவன் நீஇ !
போதனரில் போதனன் நீஇ!
புண்ணியருள் புண்ணியன் நீஇ !

–வீரசோழியம் உரை

செல்வம் கொழித்துக் கொண்டிருந்த சிராஸ்வதி நகரில் திரைகடலோடித் திரவியம் தேடிய பெருந்தனிகர்கள் சிலர் இருந்தனர். சுதத்தர், மிருகாரர் முதலிய இந்த வணிகர்கள் இந்திய நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பொருள்களை அனுப்பி வாணிபம் செய்து வந்ததில், பொன்னும், வெள்ளியும், மணிகளும் அந்நகரிலே குவிந்து கொண்டிருந்தன. சமுதாயத்திலே பிராமணர்களுக்கும், படைத் தலைவர்களுக்கும் அடுத்தபடியாக, அக்காலத்தில் இத்தணிகர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவர்களில் சுதத்தர் கோடீச்வரர். இராஜகிருகத்திலிருந்த சூலர்[1] என்ற கோடீச்வரரின் சகோதரியை அவர் மணந்திருந்தார். அதனாலும், தொழில் காரணமாகவும் அவர் அடிக்கடி மைத்துனர் ஊருக்குச் சென்று வருவார். அங்கே


  1. இவர் பெயர் உறுதியாகத் தெரியவில்லை. விநய பிடகத்தில் ‘இராஜகிருகத்து இலட்சப் பிரபு’ என்றே கூறப்பட்டுள்ளது.