பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அநாத பிண்டிகர் ⚫ 229

திற்குப் பிறகு, அவரிடம் வந்து அமர்ந்து கொண்டு, அவர் உடல்நலம் முதலியவைபற்றி விசாரிக்கலானர். பேச்சின் நடுவில் அவர், ‘இங்கு திருமணம் எதுவும் நடக்கவில்லை ; மகாராஜரும் வரவில்லை. இந்நகரில் வேணு வனத்திலே தங்கியிருக்கும் புத்தர் பெருமான் பிக்குக்களுடன் நாளை இங்கே அமுது செய்ய இசைந்திருக்கிறார். அதற்காகவே ஏற்பாடுகள் நடக்கின்றன!’ என்று கூறினார்.

‘புத்தரா? புத்தர் என்றுதானே சொன்னீர்?’ என்று வியப்புடன் வினவினார் அநாத பிண்டிகர்.

‘ஆம், புத்தரே!’

அப்பொழுதும் அநாத பிண்டிகர் நம்பால், மீண்டும் இருமுறை தமது கேள்வியைக் கேட்டு, உண்மையைத் தெரிந்து கொண்டார். சாட்சாது புத்தரே!

‘உலகத்திலே “புத்தர்” என்ற திருப் பெயரின் ஒலி கூடக் கேட்பதில்லையே! புத்தர்! இப்பொழுது நான் உடனே சென்று போதியடைந்த அந்தப் புனிதரை-புத்தரை-நேரில் தரிசனம் செய்ய முடியுமா?”

“இப்பொழுது சரியான சமயமில்லை. நாளை அதிகாலையில் சென்று தரிசிக்கலாம்!”

அநாத பிண்டிகர் உணவருந்திவிட்டுப் படுத்துக் கொண்டார். இரவெல்லாம் மறு நாள் காலையில் கலைகட்கெல்லாம் நாதரான கருணை வள்ளலைக் கண்களால் கண்டுகளிப்பதைப் பற்றியே அவர் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார். இடையில், இரவிலேயே பொழுது விடிந்துவிட்டது என்று கருதி, இரண்டு முறை எழுந்திருந்து பார்த்தார். மாளிகையைச் சூழ்ந்து இருட்போர்வையே போர்த்தியிருந்தது. ஆயினும் மூன்றாவது முறை எழுந்ததும், இருளிலேயே அவர் நேராக வள்ளல் வசித்து வந்த வனத்தை நோக்கிப் புறப்பட்டார்.