பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 ⚫ போதி மாதவன்

செல்வம் தானாகத் தீமை பயப்பதில்லை; அதிலே பற்று வைத்து அதனுடன் ஒட்டிக் கொள்வது தான் கூடாது! பற்றுக் கொண்டு உள்ளத்தை விஷமாக்குவதை விட, அதை உதறி விடுவதே நலம்!’[1] என்று கூறினார்.

அவர் ஊருக்குத் திரும்புகையில் வழியெங்கும், ‘போதி, மாதவர் சிராவஸ்திக்கு வருகிறார்!’ என்று ஊர் ஊராகத் தகவல் சொல்லி சாலையின் முக்கியமான இடங்களிலெல்லாம் பிக்குக்கள் தங்கி இளைப்பாறுவதற்கு ஏற்ற நிலையங்கள் அமைக்கவும், மற்ற வசதிகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்து கொண்டே சென்றார்.

சுத்தோதனரின் அழைப்பு

இராஜகிருகத்திலேயே புத்த பகவர் தங்கியிருந்த காலையில் அவருடைய அருமைத் தந்தையார் சுத்தோதன மன்னர் பல தூதர்களை அவரிடம் அனுப்பியிருந்தார். வந்தவர்கள் அனைவரும், அவரிடம் அறம் கேட்டுப் பிக்குக்களாகி, வேணுவனத்தின் மரங்களின் அடியிலே தியானத்தில் அமர்ந்து கொண்டிருந்தனர். இவ்வாறு ஒன்பது முறை தூதர்களை அனுப்பி ஏமாந்துபோன மன்னர், கடைசியாக உதாயி என்ற புத்தருடைய வாலிபத் தோழனைத் தக்க பரிவாரங்களுடன் அனுப்பத் தீர்மானித்திருந்தார். புத்தர் ஞானமடைந்தவுடன் அவரைத் தரிசித்த திரிபுஷன், பல்லிகன் என்ற இரு வணிகர்களும் கபிலவாஸ்துவுக்குச் சென்ற சமயம் அவரைப் பற்றிய விவரங்களையெல்லாம் அரண்மனையிலேயே அரசருக்கும், யசோதரை முதலியோருக்கும் கூறியிருந்தனர். அதிலிருந்து எல்லோருக்கும் ஐயனின் திருமுகத்தை எப்போது காணலாம் என்ற ஆர்வம் துடித்துக் கொண்டிருந்தது. மன்னரும் தாம் உலகை விட்டுப் பிரியுமுன்


  1. ‘The Gospel of Buddha'–by Dr. Paul carus.