பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 241

ருடைய சொந்தக் குமாரரே! ஆயினும் அவருக்கும் இவருக்கும் இடையில் எவ்வளவு தூரம்! அந்த முனிவர் இப்போது சித்தார்த்தர் அல்லர்– புத்தர், புனிதர், தரும ராஜா, தாரணியின் தனிப்பெரும் குரு! இவரோ பற்றுக்கள் நிறைந்து, இன்னும் குழப்பத்திலேயே தத்தளித்துக் கொண்டிருந்தார்! ஏழு ஆண்டுகளாக இந்த நாளை எதிர்பார்த்துத் துடித்துக் கொண்டிருந்த மன்னரது உள்ளத்தில் எத்தனையோ உணர்ச்சிகள் குமுறிக் குமைந்து கொண்டிருந்தன. ‘சித்தார்த்தா!’ என்று அருகே சென்று கூவி அழைக்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை அவர் உடனே அடக்கிக் கொண்டார்.

புத்தரின் ஆற்றல்

போதி வேந்தர் மன்னரின் மனநிலையை ஊகித் தறிந்து, தமது இருத்தி ஆற்றலை அவருக்கும் மக்களுக்கும் சிறிது காட்ட வேண்டும் என்று திருவுளம் கொண்டார். நியக்குரோத வனத்தை அடைந்ததும், அவர் திடீரென்று வானத்திலே எழுந்து, ஆகாயத்திலே நடந்தும், தமது திருமேனியைப் பலவிதமாகப் பிரித்தும், சேர்த்தும் காட்டினார். அவர் உடலின் மேற்பகுதியிலிருந்து நெருப்புப் பிழம்புகள் பாய்ந்தன. அடுத்தாற் போல் அவர் இந்தக் காட்சியையே மாற்றிக் காட்டினார். பின்னர் வலது புறத்திலிருந்து நெருப்பும், இடது புறத்திலிருந்து நீரும் பெருகிக் கொண்டிருந்தன. இவ்வாறு இரட்டை இரட்டையான இருபத்திரண்டு ஆற்றல்களை[1] அறத்தனக முதல்வர் அன்று செய்து காட்டியதாகக் கூறப்படுகின்றது.

சுத்தோதனர் தம் துயரையெல்லாம் கைவிட்டு, மைந்தருடைய துறவின் மாண்பை அறிந்து, பேரதிசயம்


  1. இரட்டைப்பட்ட இந்த இருத்தியை ‘யமக-பாதி ஹாரியம்’ என்பர்.