பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244 ⚫ போதி மாதவன்

டாம்! வினவுவோனும் தவறு செய்கிறான்; விடையிறுப்போனும் தவறே செய்கிறான். (சித்தத்துக்கு எட்டாதவைகளைப் பற்றி) எதுவும் சொல்ல வேண்டாம்!

‘திரை திரையாகக் கழற்றிவிட்டுப் பார்த்தாலும், பின்னும் திரைமேல் திரையே மூடிக் கொண்டிருக்கும்.

‘உலகில் இருப்பதைக் கொண்டு உண்மையை உணர்தலே போதும். வாழ்வும், மரணமும், இன்பமும், துன்பமும் இங்கே இருக்கின்றன; காரணத்தைத் தொடர்ந்தே காரியம் நிகழ்கின்றது. கால வெள்ளத்திலே நிகழ்ச்சிகள் அலை மேல் அலையாக வீசிக்கொண்டு செல்லும் ஆறு போல் தொடர்பாக நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. ஒரே ஆறு தான், ஆயினும் ஒன்றல்ல; மலையிலே தோன்றிய வெள்ளம் சமவெளியிலே இல்லாது மாறுகின்றது. ஆறு கடலில் மறைந்து, ஆவியாகி, மேகமாகி, மலைமீது பொழிந்து மீண்டும் ஆறாக வந்து ஓடுகின்றது. அதற்கு ஓய்வுமில்லை; ஒழிவுமில்லை.

‘பிரார்த்தனை செய்து என்ன பயன்? இருள் வெளுத்து விடாது! மோன நிலையைப் பார்த்து வரம் கேட்டால், மௌனமே பதிலாக வரும்! சோதர சோதரிகளே, இயற்கையிலேயே துக்கமடைந்துள்ள நீங்கள், கடுமையான தவங்களால் மேலும் மேலும் உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம்.

‘தெய்வங்களை வேண்டி உயிர்ப்பலிகள் அளிக்க வேண்டாம்; பண்டம், பழங்கள்