பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250 ⚫ போதி மாதவன்

ததாகதரின் தெள்ளிய மொழிகளைக் கேட்ட மக்கள் தங்கள் மனமாசுகள் கரைந்து, நல்லுணர்வு பெற்று மகிழ்ந்தனர். அரசரும் உள்ளம் பரவசமடைந்து தமது அரண்மனைக்குத் திரும்பிச் சென்றார். புத்தர் நியக்குரோத வனத்திலேயே தங்கியிருந்தார் அன்று கூடியிருந்த அரச குலத்தைச் சேர்ந்தவர்களும், பிரபுக்களும், எக்காரணத்தாலோ பெருமானை மறுநாள் அமுது உண்ண அழைக்காமலே சென்றுவிட்டனர்.

தந்தைக்கு உபதேசம்

மறு நாள் காலையில் அருள்வள்ளல் தமது வழக்கம் போல் பிச்சையெடுக்க வெளியேறி நகருக்குள்ளே செல்லலானார். அவர் கையிலே சுரைக்குடுக்கை போன்ற மண் பாத்திரம் இருந்தது. அவருடைய அகத்தின் ஒளி முகத்திலும் உடலிலும் பிரகாசித்துக்கொண்டிருந்தது. அவரைப் பார்ப்பதற்காகத் தெருக்களிலும், மாடிகளிலும், சாளரங்களிலும், பெண்களும் பிரபுக்களும் நிறைந்து நின்றனர். ஐயன் சாலை மண்ணிலே நடந்து ஐயமெடுக்கும் காட்சியைக் கண்ட பலருடைய கண்களிலே கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வீடுதோறும் பெண்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு அமுது அளித்தனர். புத்தர் தெருக்களில் நடந்து பிச்சையெடுக்கிறார் என்ற செய்தி நகரெங்கும் பரவி, விரைவிலே மன்னருக்கும் எட்டிற்று.

மன்னர் மிகவும் துக்கமடைந்தார்; துக்கம் கோபமாக மாறிவிட்டது. உடனே அரண்மனையிலிருந்து குதிரை மீது ஏறிப் புத்தரை நாடித் தெருக்களுக்கு விரைந்து சென்றார். வழியிலே பெருமான் வீடுதோறும் வாசலில் சிறிது நேரம் மௌனமாக நிற்பதையும், அவர் கரங்களிலே பிச்சையெடுத்த சோற்றுடன் திருவோடு விளங்குவதையும் கண்ட மன்னர், விசனம் தாங்காமல், ‘என்னை ஏன் இப்படிக் கேவலப்படுத்துகிறீர்? உமக்கும் பிக்குக்கள்