பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254 ⚫ போதி மாதவன்

பூண்டு சென்றபின் அவைகளும் கண்ணுக்குப் புலனாகாமல் மறைந்திருக்கின்றன. நீ அவரிடம் சென்று, நீ யுவ ராஜா என்றும், மகுடம் புனைந்தபின் நீ மாநிலத்து அரசனாக விளங்குவாய் என்றும் சொல்லி, தந்தையின் உடைமை மைந்தனுக்கு உரியது என்பதால், அவருடைய பொக்கிஷத்தை உனக்கு அளிக்கும்படி கேட்டு வர வேண்டும்!’ என்று சொல்லிக் கொடுத்தாள்.

அன்னை கூறியபடியே இராகுலன் புத்தரிடம் சென்றான். அவர் அப்போது அமுது செய்து கொண்டிருந்தார் அவரைக் கண்டதுமே, செல்வன் உள்ளத்தில் அன்பு பெருகிற்று. அவர் உணவு அருந்திய பின்பு, அருகே சென்று ‘ஐய! எனக்கு உரிய தந்தையின் செல்வத்தைத் தந்தருள வேண்டும்!’ என்று கேட்டுக் கொண்டான். புத்தர் ஒரு முடிவும் கூறாவிடினும், அவன் அவரைத். தொடர்ந்து - நியக்குரோத வனத்திற்கே சென்று விட்டான்.

அங்கும், ‘ஐய! எனக்கு உரிய தந்தையின் செல்வத்தைத் தந்தருள வேண்டும்!’ என்று கூறினான். அருள் வள்ளல் தாம் போதி மரத்தின் அடியில் பெற்ற அழியாத செல்வத்தையே அவனுக்கு அளிக்க வேண்டும் என்று கருதினார். உடனே சாரீபுத்திரரைப் பார்த்து, ‘என் குமரன் பிதிரார்ச்சிதத்தைக் கேட்கிறான். கவலைகளையும் துக்கங்களையும் உண்டாக்கும் அழியும் செல்வங்களை அவனுக்கு நான் அளித்தல் கூடாது; அழியாத செல்வமாகிய புனித வாழ்வையே அவனுக்குச் செல்வமாக வழங்க வேண்டும்!’ என்று கூறினார்.

பின்னர் இராகுலனை நோக்கி, ‘பொன்னும், வெள்ளியும், நகைகளும் என்னிடம் இல்லை. உயர்ந்த வாழ்வுக்குரிய செல்வங்களை நீ பெற விரும்பினால், அவைகளைத் தாங்கிப் பாதுகாக்கும் சக்தி உனக்கு இருந்தால், நான்கு