பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 323

வாய்மைகளை உனக்குக் கற்பிக்கிறேன்; அவற்றை உணர்ந்து கொண்டு, எட்டு முறைகள் அமைந்த அஷ்டாங்க மார்க்கத்தை நீ பின்பற்ற வேண்டும். அடைய தக்க இன்பங்களிலே தலைசிறந்த இன்பத்தை அடைவதற்காக உள்ளத்தைப் பயிற்சி செய்து வரும் பிக்குக்களின் சங்கத்திலே நீயும் சேருவதற்கு விரும்புகிறாயா” என்று பெருமான் வினவினார்.

இராகுலன் உள்ள உறுதியுடன், ‘ஆம், விரும்புகிறேன்!’ என்றான்.

அவனுக்கு மேற்கொண்டு பிறவியில்லை என்பதை உய்த்துணர்ந்த பெருமான், சாரீபுத்திரரை அழைத்து, இராகுலனுக்கு உபதேசம் செய்து, சங்கத்தில் சேர்த்துக் கொள்ளும்படி கூறினார். அவ்வாறே இராகுலன் சுமார் ஏழு வயதிலேயே துறவு வாழ்க்கையை மேற்கொண்டான்!

பிற்காலத்தில் போதிவேந்தரின் முக்கியமான சீடர்களில் இராகுலனும் ஒருவனாகக் குறிப்பிடப் பெற்றிருக்கிறான். அவன் தெளிந்த சிந்தனையும் தேர்ந்த ஞானமும், உயர்ந்த ஒழுக்கமும் பெற்று விளங்கினான். அத்தகைய உயர் நிலையை அடைவதற்கு முன்னால், போதி நாதர் அவனைத் தம் அருகிலே வைத்துக் கொள்ளாமல், வெகு தூரத்திலுள்ள விகாரையிலே தங்கி விநய ஒழுக்கங்களை நிறைவேற்றி வரும்படி உபதேசித்திருந்தார். அப்படியிருந்தும், அவன் நாவடக்கமின்றிப் பிக்கு ஒழுக்கத்தில் நிலைபெறாமல் இருப்பதாகக் கேள்வியுற்று, பெருமான் ஒருமுறை அவனைக் கண்டு அறவுரை புகன்ற விவரம் ‘மகாராகுல சூத்திர’த்தில் காணப்பெறுகின்றது. சத்தியத்தின் மகிமையையும், நாவடக்கத்தின் நயத்தையும், நாவினால் பொய் கூறுதல் உள்ளத்தை எவ்வாறு பாழாக்குகின்றது என்பதையும், அதனால் வாழ்வே தாழ்-