பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 ⚫ போதி மாதவன்

திருந்த கலைகள் எவற்றினாலும் அத்தகைய சிவிகையை அமைத்திருக்க முடியாது என்று கருதும்படி, அது அவ்வளவு அழகாயிருந்தது.

தலைநகருக்குத் திரும்புவதற்குரிய ஏற்பாடுகள் விரை வாக நடந்தேறின. யானைகள், குதிரைகள், படைகளெல்லாம் திரண்டு சென்றன. மக்கள் பலரும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்து கொண்டு சென்றனர். மண்ணகத்தின் மகிழ்ச்சியிலே பங்கு கொள்ளத் தேவர்களும் உருமாறித் திரள் திரளாக வந்து கலந்து கொண்டனர், திசை காவலரான நான்கு தேவர்கள், வேற்றுருக் கொண்டு போகிகளாக வந்து, போதிசத்துவரின் பல்லக்கைத் தூக்கிச் சென்றனர்.

வழியிலே, கபிலவாஸ்துவுக்கு அருகில் ஒரு தேவாலயம் இருந்தது. போதிசத்துவரை அங்கு அழைத்துச் சென்றது பற்றி ஒரு கதையுண்டு. தொன்று தொட்டே சாக்கிய மரபினர் அங்குள்ள சிலையை வணங்கி வழிபடுதல் வழக்கம். சுத்தோதனரும் தம் அருமைக் குழந்தை அவ்வாலயத்துள்ள தெய்வத்தை வணங்குதல் நலமென்று கருதி, குழந்தையையும் பரிவாரங்களையும் உள்ளே அழைத்துச் சென்றார். குழந்தையை ஒரு பணிப்பெண் கையிலே வைத்துக் கொண்டு சிலையருகே சென்றாள். அந்த நேரத்தில் அபயன் என்னும் தேவனொருவன், அந்தச் சிலை போதிசத்துவரின் வணக்கத்திற்குரியதன்று என்றும், அதுவே அவரை வணங்குதற்குரியது என்றும் கருதி. பீடத்திலிருந்து சிலை இறங்கி வந்து போதிசத்துவர் முன்பு தரையில் தலை வைத்து வணங்கும்படி செய்தான். அப்போது அவன் பணிப் பெண்ணைப் பார்த்து, ‘அம்மா’ உன் கையிலிருப்பவர் உலகங்கெல்லாம் உவந்து வணங்குதற்குரியவர்! அவர் வணங்தற்குரியவர் எவருமில்லை!’ என்று கூறினன். இக்காட்சிகளைப் பார்த்தவர் யாவரும் பரவசமுற்றனர்.