பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 261

ஆனந்தன் பெருமானின் அழைப்புக்குப் பாத்திரமான அருமைத் தொண்டன். பெருமானிடத்தில் அவன் கொண்டிருந்த அன்புக்கும் அவதியில்லை.[1] அவன் ஒழுங்கு நிலை நின்று, ஐயன் அறவுரைகள் கூறும்போதெல்லாம் ஆர்வத்தோடு அவைகளைக் கேட்டு வந்தான். பிற்காலத்தில் பெருமானுடைய ஐம்பதாவது வயதிலிருந்து அவருடைய ஆயுள் முழுவதும் அவர் அருகிலேயேயிருந்து அவருக்குத் தொண்டு செய்யும் அணுக்கத் தொண்டனாக விளங்கியவன் ஆனந்தனே. பின்னால் நெடுநாள் பிக்குவாயிருந்த அவனை ‘ஆனந்த தேரர்’ என்றே அழைப்பது வழக்கம். புத்தருடைய பிரதம சீடர்களிலே மகாகாசியபர், சாரீபுத்திரர் போன்ற பேரறிவும், மௌத்கல்யாயனர் போன்ற இருத்தி ஆற்றிலும், கேட்டவுடன் மனத்தால் பற்றி உணர்ந்து கொள்ளும் அஞ்ஞாத கௌண்டின்யரைப் போன்ற உறுதியும் ஆனந்தனுக்கு இல்லை எனினும், அவன் மெய்யறிவு, பெற இடைவிடாது உழைத்து வந்தான். இடையிடையே உலக பாசங்கள் ஏற்பட்டு அவன் சித்தம் தடுமாறுகையில், ஐயன் அதைக் கருத்தால் உணர்ந்து, அவ்வப்போது அவனுக்கு உதவி புரிந்து, அறிவு புகட்டி வந்ததாக விவரிக்கும் கதைகள் பல இருக்கின்றன. மொத்தத்தில், புத்தர் பெருமானின் திரு நாமத்தை நினைக்கும் போதெல்லாம் அதனுடன் ஆனந்தனுடைய நினைவும் தோன்றும்படி, அவன் ஐயனின் நிழல்போல அவர் வாழ்க்கை முழுவதும் அவரோடு இணைபிரியாமல் இருந்து வந்தான். மேலும் இன்று உலகத்திலே பௌத்த தருமத்தைப்பற்றி விளக்கும் முக்கியமான் சூத்திரங்கள் அடங்கிய ‘சுத்த பிடகம்’ மகா காசியபர் தலைமையில் ஆனந்தன் வரிசைப்படுத்திக் கூறிய வரலாறுகளும் உபதேசங்களும் அடங்கிய நூலாகும். மகாகாசியபரும் மற்றைத் தோழர்களும்


  1. அவதி–எல்லை.