பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 263

அனுருத்தனுடன் சித்தார்த்தருடைய மைத்துனனான தேவதத்தனும்;[1] பத்திரிகன், பகு, கிம்பிலன் முதலிய அரச குலக்குமரர்களும் துறவு பூணுவதற்காகப் புத்தரை நாடி நியக்குரோத வனத்திற்குச் சென்றனர். அவர்களுக்குத் தலைகளை முண்டிதம் செய்வதற்காக அரண்மனை நாவிதனான உபாலி என்பவனும் அவர்களுடன் சென்றான்.

தவப்பள்ளியை அடைந்ததும் அரச குமாரர்கள் தலைகளை மழுங்கச் சிரைத்துக் கொண்டு குளிப்பதற்குச் சென்றனர். போகுமுன் அவர்கள் தங்கள் ஆடைகளையும் ஆபரணங்களையும் கழற்றி உபாலியிடம் கொடுத்திருந்தனர்.

உபாலி யோசித்தான்: ‘அரச வமிசத்தைச் சேர்ந்த கட்டிளங் காளைகளே இரத்தின ஆபரணங்களையும், உடைகளையும் தூர எறிந்துவிட்டுத் துறவு பூணச் செல்கிறார்கள்! நான்மட்டும் இந்தத் துன்பச் சுமைகளைச் சுமந்துகொண்டிருப்பதில் என்ன பயன்?, பாவியேன் இழி குலத்தில் தோன்றியிராவிடின், இதற்குள் புத்த பகவரின் - மேன்மையான தருமத்தை ஏற்றுக்கொண்டு துறவியாகி, என் பிறவிப் பிணியை ஒழித்திருப்பேனே!’ இவ்வாறு ஏக்கமுற்று, அவன் பள்ளிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தான்.

அப்பொழுது அங்கு வந்த சாரீபுத்திரர் அவனைக் கண்டு, அவன் சிந்தையையும் உணர்ந்துகொண்டு, ‘உபாலி ஏன் சோகமுற்று நிற்கிறாய்!’ என்று வினவினார். உபாலி தன் உள்ளக் கருத்தை உரைத்தான். அவர் அவனைக் கருணை வள்ளலிடம் அழைத்துச் சென்றார்.


  1. தேவதத்தனும் சுக்கிலோதனருடைய புத்திரன் என்றும் கூறப்படும்.