பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்தரின் அவதாரம் ⚫ 25

தங்கள் இளவரசர் தலைநகருக்கு வருகிறார் என்றதைக் கேட்டதும், கபிலவாஸ்துவின் மக்கள் அனைவரும் நகரை அலங்கரிக்க ஆரம்பித்தனர். வீதிகளை விளக்கி, வாசல்களில் குலை வாழைகள் கட்டி, எங்கும் தோரணங்கள் நட்டு, மலர்ப்பந்தல்கள் அமைத்து, நகரம் முழுதும் நறுமணங் கமழச் செய்தனர். தெருக்களிலே பார்த்த இடமெல்லாம் பல வேடிக்கைகள் நடந்து வந்தன. புலி வேடம், கரடிவேடம் புனைந்து ஆடுவோரும், இசையும் முழவும் முழங்க, கால்களில் சலங்கைகள் கலீர் கலீரென்று ஒலிக்க, நாட்டியமாடும் மாதர்களும், உடல் வலிமையால் மல்யுத்தம் முதலிய பிரமிக்கத் தக்க காட்சிகள் காட்டுவோரும், மங்கல வாத்தியங்கள் பல வாசிப்போரும் ஆங்காங்கே மக்களை மகிழ்வித்து வந்தனர். எங்கணும் திருவிழாவாகவேயிருந்தது. இத்தனை மக்களும் அன்று வரை எங்கேயிருந்தனரென்று வியக்கும்படி ஜனங்கள் கூட்டங்கூட்டமாகக் கூடிக் கடலலைகள் போல் ஒலி செய்து கொண்டிருந்தனர்.

மன்னரின் உறவினர்களும், நகரின் செல்வர்களும், சாக்கிய குலதிலகங்களான் வீரர்கள் யாவரும் ஒருவருக் கொருவர் முந்திக்கொண்டு இளவரசரை ஆவலோடு வரவேற்றனர். அரண்மனை முழுதும் கோலாகலமாக விளங்கியது. சுத்தோதன மன்னர் அந்தணர் பலரையும் வரவழைத்து, தங்கக் கிண்ணங்களில் உணவளித்து. விலையுயர்ந்த ஆடைகளையும் வழங்கினார். இளவரசைக் கண்டு வணங்கப் பல இடங்களிலிருந்து வந்திருந்த வணிகர்கள் தங்கத் தாலங்களிலே சந்தனம், அகில், கஸ்தூரி, கற்பூரம் முதலிய கந்தப் பொருள்களையும், ஆவி விரியும் பால் நுரை போன்ற பட்டுக்கள், துணிகள். சல்லாக்கள். சால்வைகள், கம்பளங்களையும், கனகமணி மாலைகள், முத்துச்சரங்கள் முதலிய ஆபரணங்களையும்

போ -2