பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268 ⚫ போதி மாதவன்

தோன்றாமல் செயலற்று நின்றான். உடனே இருகைகளையும் கூப்பிச் சுந்தரியை வணங்கி, வெளியே சென்று வர விடை கேட்டான. அண்ணல் அரண்மனையில் அமுது பெறாமல் வெறுங்கையோடு வெளியேறியதைக் கேட்டு, அவளும் மனமிரங்கி அனுமதி கொடுத்தாள். ஆனால் தான் நெற்றியில் வைத்த பொட்டுக் காய்வதன் முன்னம் அவன் விரைந்து வரவேண்டும் என்று சொல்லியனுப்பினாள்.

நந்தன் தன் அணிகளும் ஆடைகளும் அசைந்தாடக் காற்று உலுக்கிய கற்பகமரம் போல் கீழே இறங்கி ஓடிச் சென்றான் பின்னர் நடை தளர்ந்துவிட்டது. ஒரு பக்கத்திலே ஐயனிடம் அவனுக்குள்ள மரியாதை அவனை முன்னால் இழுத்துச் சென்றது; மற்றொரு புறத்திலே காதலியின் கடைக்கண் பார்வை அவனைப் பின்னுக்கு இழுத்தது. உள்ளத்தில் உறுதியில்லாமல் அவன் தத்தளித்தான். பிறகு ஒருவாறு முன்நோக்கி விரைந்து, பல தெருக்களையும் தாண்டிச் சென்றான்.

தந்தனின் தடுமாற்றங்கள்

வழியிலே சாக்கியர் பலர் கூடியிருப்பதை அவன் கண்டான். குதிரைகளிலும், தேர்களிலும் ஊர்ந்து வந்தவர்கள் அனைவரும் கீழே இறங்கிப் போதிநாதரை வணங்கிக் கொண்டு நின்றனர். அந்தப் பெருங்கூட்டத்திலே நந்தன் நுழையவில்லை; வெளியேயிருந்து கொண்டே உலக நாயகருக்கு நடைபெறும் மரியாதைகளைக் கண்டு உள்ளம் மகிந்து நின்றான். சிறிது நேரத்திற்கெல்லாம், அவன் விரைவில் திரும்ப வேண்டும் என்ற சுந்தரியின் ஆணை நினைவுக்கு வந்துவிட்டது. அவன் மெதுவாக அங்கிருந்து வெளியேறி, ஒரு சந்தின் வழியாகத் திரும்பிச் சென்றான்.