பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276 ⚫ போதி மாதவன்

மற்றொருத்தி, ‘நந்தர் அங்கே நிலைத்திருக்க மாட்டார்! உன்னை எண்ணி விரைவிலே வந்துவிடுவார்!’ என்று ஆறுதல் கூறினாள்.

நந்தனின் கடைத்தேற்றம்

தவப்பள்ளியிலே நந்தன் வெளித்தோற்றத்திலே துறவியாகவும், அகத்திலே தன் காதல் தேவதையை உபாசித்துக் கொண்டும் இருந்ததால், அவனுக்கு அமைதியே ஏற்படாமற் போயிற்று. தன்னைச் சுற்றியிருந்த முனிவர்கள் அருமைக் காதலிகளைப் பிரிந்து எப்படித்தான் தனித்திருந்து தவம் செய்கிறார்களோ என்று அவன் அதிசயித்தான். ‘கொடிய உறுதியுடன் விரதம் மேற்கொண்ட துறவிகள் முன்னும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள்! ஆயினும் காதலை அறுத்துக் கொண்டு வெளியேறுவது எளிதான செயலன்று! சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்களுடன் விளங்கும் காதலியின் மதிமுகத்தையும், குயில் போன்ற இனிய குரலையும் யாரும் எளிதில் மறந்துவிட முடியாது, கயிறு, மரம், இரும்பு முதலியவற்றால் செய்த விலங்குகளை எளிதில் தகர்த்து விடலாம்; ஆனால் காதல் விலங்கை உடைப்பது கடினம்!’ என்றெல்லாம் அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான். புத்தரின் நினைவும், போக ஆசையும் அவனை மாறிமாறி அலைத்துக் கொண்டிருந்தன.

‘நான் தான் வீட்டைவிட்டு வெளியேறினேன்; ஆனால் என் காமக் குரோதங்கள் உள்ளத்தைவிட்டு வெளியேற வில்லையே! பழைய ஆடையைக் களைந்தெறிந்தேன்; ஆயினும் பாவப் போர்வை என்னைவிட்டு அகலவில்லையே! எனக்குத் தெள்ளிய அறிவும், திடமான சித்தமும் வாய்க்கவில்லையே! நான் என் செய்வேன்!’ என்று அவன் ஏங்கி, மீண்டும் அரண்மனைக்கே திரும்ப