பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 ⚫ போதி மாதவன்

ஏந்தி வந்து, மன்னரை வாழ்த்தித் திறையாகச் செலுத்தினார்கள். மாடங்கள் கூடங்களெல்லாம் மங்கல கீதங்கள் முழங்கிக்கொண்டிருந்தன.

அசித முனிவரின் ஆசிகள்

ஒப்புயர்வில்லாத உலகச்சோதியான குழந்தை மாநிலத்தைத் தேடிவந்து மன்னர் மாளிகையிலே வளர்ந்து வந்த செய்தியையறிந்த அசித முனிவர் என்பார், அதைக் காண்பதற்காக மிக விரைவாக வந்து சேர்ந்தார். அவர் தவத்தாலுயர்ந்த தபோதனராதலால், மன்னர் அவரைக் கண்டதும் எழுந்து வணங்கி, வரவேற்று உபசரித்தார். முனிபுங்கவர் ஓர் ஆசனத்தில் அமர்ந்தபின், புதிதாய்ப் பிறந்த புனிதக் குழந்தையை அவர் பாதத்தடியில் கொணர்ந்து வைக்கும்படி அரசர் ஆணையிட்டார். அருந்தவம் புரியும் அசிதர் வாயால் செல்வச் சிறுவனை வாழ்த்திட வேண்டுமென்று அவர் விரும்பினார். தாமரைச் செல்வி தங்கப் பதுமையை ஏந்தி வருதல்போல், மாயாதேவி மைந்தனைப் பட்டுத்துகிலில் படுக்கவைத்து எடுத்து வந்தாள். கறுத்த முனிவரைக் கண்டதும், தேவி, குழந்தையின் முகத்தை அவர் பக்கமாகத் திருப்பி, ‘வேதிய ரிஷியை வணங்கு, என் செல்வமே!’ என்று கூறினாள். குழந்தை முகத்தை அவள் பக்கமாகவே திருப்பிக்கொண்டு, கால்களை முனிவர் பக்கமாக நீட்டிற்று. அன்னை மூன்று முறை முயன்றும், அசிதருக்கு நேராக அதன் திருவடிகளே தென்பட்டன. இந்த வேடிக்கையைக் கண்டு முற்றுந் தெரிந்த முனிவர் தமக்குள்ளே நகைத்துக்கொண்டு, ஆசனம் விட்டெழுந்து, தம் அங்கங்கள் தரையில் படும்படி வீழ்ந்து குழவியுருக் கொண்ட குருநாதரை வணங்கினார்.

‘மதலாய் நின்னடி மலரிணை தொழுதேன்!
அவனே நீயாம், ஐய மதற்கிலை!
உண்மை ஒளியால் உள்ளிருள் போக்கி,
நன்மை விளைக்கும் ஞாயிறு நீயே!’