பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்தன் ⚫ 279

புத்தர் அவனைத் திரும்பப் பூவுலகுக்கு அழைத்து வந்தார். அவன் மனப்பான்மையை அறிந்து, ‘வானுலக வாழ்க்கை வேண்டுமானாலும், சித்தத்தை அடக்கிச் சீலம் பேணித் தவம் செய்யவேண்டும்!’ என்பதை வற்புறுத்தித் கூறினார் அதன்படியே நந்தன், அப்சரசுகளை மனத்திலே பதித்துக்கொண்டு, துறவு நெறி நின்று நோன்பை மேற்கொண்டான்.

சில நாட்களுக்குப் பின்பு ஆனந்தர் அவனைக் கண்டு பேசினார். ‘நீ நல்ல முறையில் திருந்தி, உண்மை நெறியில் நிலைத்து நிற்கிறாய். ஆனால் அப்சரசுகளை அடைய வேண்டும் என்பதே உன் உட்கருத்து என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். இது உண்மையா?’ என்று கேட்டார். அவன் முகத்தோற்றத்திலிருந்து அவன் மனப்பான்மையை அறிந்து கொண்டார். ‘உன் எண்ணத்தைப் பார்க்கும் போது உன்னிடம் இரக்கமே வருகின்றது! விறகால் தீயை அணைக்க முடியுமா? மருந்துகள் உண்ண ஆசை கொண்டு நோயை வரவழைத்துக் கொள்ளலாமா? அணங்குகள், அப்சரசுகள்–எவர்களாயிருந்தாலும், முடிவில் அவர்களையும் இழக்கத்தான் வேண்டும்! எத்தனை பிறவிகளில் எத்தனை அப்சரசுகளைக் கண்டாயிற்று! உண்மையான சாந்தி–அழியா வாழ்வு–ஒன்றை நாடியே தவங்கிடக்க வேண்டும். எந்தப் பயனையும் கருதி அதை மேற்கொள்ளலாகாது!’ என்று அலர் அறிவு புகட்டினார். ‘சுவர்க்கமும் அழிவுள்ளது; தேவர்களுக்கும் தம் செயல்களுக்குத் தக்கவாறு பிறவிகள் உண்டு. பிறவா நிலையை அடைவதே பேரின்பம்!’ என்பதை விளக்கினார்.

நந்தனுடைய மனமாகிய தேரை இழுத்துச் சென்று கொண்டிருந்த கற்பனைக் குதிரைகள் நின்று விட்டன. அவன் தெளிவடைந்து தேரை நிருவாணப் பாதையில் திருப்பிவிட்டான். முன்னால் அப்சரசுகளைக் கண்டு தன்