பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282 ⚫ போதி மாதவன்

பெரிய தோட்டத்தை அவர் விலைக்கு வாங்கியதே ஒரு தனிச் சரித்திரம்! அந்த வனம் ஜேதர் என்ற இளவரசருக்குச் சொந்தமாயிருந்ததால், அதற்கு ஜேத வனம்’ என்று பெயர். வள்ளல் இளவரசரைக் கண்டு அதை விலைக்குக் கொடுக்க வேண்டுமென்று வேண்டினார். இளவரசர் அது விலைக்கு இல்லை யென்றார். அந்த வனத்தின் நிலம் முழுவதிலும் தங்கக் காசுகளை நிரப்பி அளித்தாலும் அதை விற்பதற்கில்லை!’ என்று அவர் சொல்லிவிட்டார். பின்னர் அநாத பிண்டிகர் மந்திரிகள் முதலாயினோரின் உதவியைப் பெற்று, இளவரசரின் மனத்தை மாற்றி, அவர் பேச்சிலே குறிப்பிட்டபடி, தங்கக் காசுகளை வனத்திலே பரப்பி, எவ்வளவு தொகையானாலும் கொடுக்கத் தயாராயிருப்பதாக அறிவித்தார். இளவரசரும் முடிவாகச் சம்மதித்தார். பேசியபடியே அநாத பிண்டிகர் தமது மாளிகையிலிருந்த ‘மசுரன்’ என்ற அக்காலத்துத் தங்கப் பவுன் மூடைகளை வண்டிகளிலே கொண்டு வரச் செய்தார். நிலமெங்கும் இடைவெளியில்லாமல் தங்கப் பவுன்கள் நிரப்பப் பெற்றன. வனத்தின் வாசலடியில் சொற்ப இடம் மட்டும் மிஞ்சியிருந்தது. அதற்கும் தேவையான பொற்காசுகளைத் தமது மாளிகையிலிருந்து மீண்டும் எடுத்துவரும்படி வள்ளல் தம் வேலையாட்களுக்குச் சொன்னார்.

அப்போது இளவரசர் ஜேதர் அநாத பிண்டிகர் கோடிக்கணக்கான பவுன்களைக் கொடுத்து அந்த வனத்தை ஏன் வாங்குகிறார் என்ற விவரத்தையெல்லாம் கேட்டறிந்தார். புத்த பகவருக்காகவும், பிக்குக்களுக்காகவும் விகாரை அமைப்பதற்காக நிலத்திற்கு மட்டுமே பொன்னை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்த வள்ளலின் மனப்பான்மையைப் பற்றி அவர் சிந்தித்துப் பார்த்தார். அந்தப் புனிதமான திருப்பணியில் தாமும் கொஞ்சம் பங்குபெற வேண்டும் என்று கருதி, அவர் மிஞ்சியிருந்த இடத்திற்குப் பணம் வேண்டாம் என்றும், அதைத் தாமே