பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284 ⚫ போதி மாதவன்

கொண்டார். அவ்வாறே ஐயனும் பல பிக்குக்களுடனே கபிலவாஸ்துவை விட்டு சிராவஸ்தி நகருக்குப் புறப்பட்டு வந்தார்.

அர்ப்பணம்

அசிரவதி[1] நதிக்கரையிலே அமைந்திருந்த அணி நகரான சிராவஸ்திக்குத் ததாகதர். எழுந்தருளுகையில், அநாத பிண்டிகர் தம் குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக் கொண்டு, மேளதாளங்களுடன், பொது மக்கள் யாவரும் தொடர்ந்து வர, அவரை எதிர்கொண்டு வரவேற்றார். ஊர்வலத்தின் முன்னணியில் வள்ளலின் மைந்தன் பெருங்குடிப் பிறந்த ஐந்நூறு இளஞ் செல்வர்களுடன் சென்றான்; அடுத்தாற்போல் அவனுடைய சகோதரிகளான பெரிய சுபத்திரை, சின்ன சுபத்திரை இருவரும் நகைகள் அணிந்த நங்கையர் ஐந்நூறு பேர்களுடன் சென்றனர்; வள்ளலின் மனைவி ஐந்நூறு சீமாட்டிகளுடன் தொடர்ந்து சென்றாள்; கடைசியாக அநாத பிண்டிகர் நகரின் முதன்மையான செல்வர் பலருடன் சென்றார். அரசர்களுக்குரிய மரியாதையுடன் ஜேத வனத்திற்கு ஐயனை அழைத்து வந்தனர். இனிய நீரோடைகளும், தடாகங்களும், மலர்களும், கனிகளும் நிறைந்த மரங்களும் ஜேதவனத்தின் எழிலை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன. எங்கும் தூப தீபங்களின் நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. வழிகளெங்கும் மலர்கள் தூவப்பெற்றிருந்தன.

அநாத பிண்டிகர் தங்கக் கெண்டியிலிருந்து புத்தர் பிரானின் திருக்கரத்தில் நீர்வார்த்து, ஜேதவனத்தையும் தாம் கட்டியிருந்த விகாரையையும் சங்கத்திற்குத் தானமாக அளித்தார். அந்த நேரத்தில், தாம் பிறவியெடுத்த


  1. ரப்தி ஆறு.