பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்தரின் அவதாரம் ⚫ 27

என்று பக்தியால் பலபடக் கூறி வழுத்தினார். கோடி யுகம் தவம் செய்தாலும் காணமுடியாத நற்றவமூர்த்தி அவதரித்திருக்கையில், தாம் அவரோடிருந்து அவர் திரு வாயால் அறம் கூறுவதைக் கேட்பதற்கில்லாமல் தம் ஆயுள் முடிந்து விடுமே எண்றெண்ணி அவர் வருந்தினார். பிணி, பசி, மூப்பு, துன்பமாகிய வாழ்வை விட்டு, விரைவிலே மரணத்தை வரவேற்க வேண்டுமென்று ஆசைகொண்டிருந்த அம் மகரிஷி, மாயா தேவியின் அருமைப் புதல்வர் வளர்ந்து பெரியவராகும் வரை வாழ்வதற்கில்லையேயென்று கருதியதும், அவர் கண்களிலிருந்து முத்து முத்தாகக் கண்ணீர் சிந்தியது. இக்காட்சிகளையெல்லாம் கண்ட மன்னர் மருண்டார்; மாயாதேவி மருகலானாள். ஏதேனும் அபசாரம் ஏற்பட்டு விட்டதோ என்று இருவரும் கலங்கினர்.

முனிவர் குழந்தையை அன்போடு கைகளில் வாங்கித் தம் ஆசனத்தமர்ந்து, அதை மடியில் வைத்துக்கொண்டார். மாயா அவரை நோக்கி, ‘அதன் முடி தங்கள் திருவடிகளில் படும்படி, வைத்துக்கொள்ளுங்கள்! என்று வேண்டினாள். அசிதர், ‘அம்மணி! இம்முடி எவரையும் வணங்காத் திருமுடி! நான் மட்டுமல்ல–தேவர்களும், யாவர்களுமே வணங்கிப் போற்றவேண்டிய குழந்தையல்லவா இது!’ என்று கூறினார்.

சுத்தோதனர், ‘பெருந்தவ முனிவ! என் மதலையைக் கண்டதும் தாங்கள் கண்ணீர் பெருக்கி வருந்தியதேன்?’ என்று வினவினார்.

அசிதர் உள்ளங் களிப்புற்றுக் கூறலானார்:

‘அரசே, பூரண சந்திரனைப் போல் நீ மகிழ்ந்து மலர்ச்சியடைய வேண்டும்! ஏனெனில், உத்தமமான ஒப்பற்ற புதல்வனை நீ பெற்றிருக்கிறாய்.