பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290 ⚫ போதி மாதவன்

உள்ளத்தை மேல் நிலைக்கு உயர்த்துக! உறுதியுடன் உண்மையான நன்மையை நாடுக! மன்னர்க்குரிய கடமைகளைப் புறக்கணிக்க வேண்டாம், உமது இன்பம் வெளிப்பொருள்களைச் சார்ந்திருக்க வேண்டாம்; உமது உள்ளத்திலிருந்தே அது வளரவேண்டும். இவ்வாறு நடந்து கொண்டால் உலகத்திலே நெடுங்காலம் உமது நற்பெயர் நிலைத்து நிற்கும்; ததாகதருடைய அருளும் கிடைக்கும்!’

பெருமானின் புனித உரைகளைப் பிரசேனஜித்து வணக்கத்தோடு கேட்டுக் கொண்டிருந்து. அவைகளைத் தமது மனத்திலே பதிய வைத்துக்கொண்டார். மன்னர் முதலில் ததாகதரைக் கண்டதும், அவர் தாமே தம்மைப் புத்தர் என்று சொல்லிக் கொள்வதைப்பற்றி ஆட்சேபித்த தாயும், அக்காலத்திலே பிரசித்தமாக விளங்கிய. பூரண காசியபர், பரிவ்ராஜக கோசாலர், சஞ்சயர், அஜிதகேச கம்பளர் முதலியோர் கூடத் தங்களை அவ்வாறு அழைத்துக்கொள்ளவில்லை என்று கூறியதாயும் திபேத்திய வரலாறு ஒன்றில் காணப்படுகின்றது. அது எவ்வாறிருப்பினும், போதிநாதரின் உபதேசத்தைக்கேட்ட பிறகு மன்னரின் மனது முற்றிலும் அமைதி பெற்று, ஐயனிடம் அளவற்ற அன்பு கொள்ளும்படி செய்து விட்டது.

பின்னால் கோசல நாட்டு மன்னர் பகவர் புத்தரிடம் பக்தி கொண்டு அடிக்கடி அவரைத் தரிசித்து வருகிறார் என்பதைக் கண்ட மற்றைச் சமயவாதிகள் மனம் புழுங்கி அழுக்காறடைந்தனர். அவர்களுக்காக அரசர் புத்தரிடம் சென்று அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்படி தமது இருத்தி யாற்றல்களைக் காட்டும்படி பணிவுடன் வேண்டினார். அவ்வாறே பகவரும் வானத்திலெழுந்து கதிரவன் போல எண்ணரிய கதிர்களைப் பரப்பிக்